கள்ளக்குறிச்சி: திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் உள்ள வன்னியர் எம்எல்ஏக்கள், உள் இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு கோரியும், தமிழக அரசைக் கண்டித்தும் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியதாவது: அனைத்து சமுதாயத்தினருக்கும் இடஒதுக்கீடு கோரி ராமதாஸ் 45 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
ஆனால், ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் அதை நிறைவேற்ற மறுக்கிறார்கள். திமுகவுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது. திமுக வன்னியர்களுக்கு விரோதி.
திமுகவில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 23 எம்எல்ஏக்கள், 5 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் ஒருவராவது முதல்வரை சந்தித்து உள் இடஒதுக்கீடு குறித்து பேசியிருக்கிறார்களா, சட்டப்பேரவையில் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 38 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால்தான் நாங்கள் பேரவைக்குள் செல்வோம் என்று போராட்டம் நடத்த தயாரா, இனியாவது திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் உள்ள, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் அனைவரும் முதல்வரை சந்தித்து, உள்இடஒதுக்கீடு வழங்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் எனக்கு உடன்பாடு கிடையாது. உண்மையில் 18 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இனியும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால், சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெருத் தெருவாகச் சென்று பிரச்சாரம் செய்யுங்கள். 2026 தேர்தலில் ஒரு வன்னியர் கூட திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.
3 எம்எல்ஏ-க்கள் சஸ்பெண்ட்: இதற்கிடையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக எம்எல்ஏ-க் கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.