சென்னை: ஒவ்வொரு குடும்பத்துக்கான உணவு பாதுகாப்பை கூட்டுறவுத் துறை உறுதி செய்வதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற 11.70 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவுக்குத் தள்ளுபடிச் சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டன.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு 1 லட்சத்து 1,963 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 10 லட்சத்து 56,816 பெண்கள் பயன்பெற்றனர். பயிர்க் கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66 லட்சத்து 24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.6,372.02 கோடி கடனை திமுக அரசு வழங்கியுள்ளது. சமூக நீதியை மேம்படுத்தும் வண்ணம் 16,578 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.470.01 கோடியும், 49,000 மகளிர் தொழில் முனைவோருக்கு ரூ.283.27 கோடியும் 4,494 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.18.80 கோடியும் கடன்களாக வழங்கப்பட்டுள்ளன.
அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.52.34 கோடி கடன் உதவியுடன் 86 துப்புரவுப் பணியாளர்களுக்கு கழிவுநீரகற்று வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 9,132 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டும், 3,353 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கும் தொடர்புடைய மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் வர்த்தகம் ரூ.10283.21 கோடியாக உள்ளது. தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான கூட்டுறவுச் சங்கங்களின் கிடங்குகளைக் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ததற்காக தமிழக அரசுக்கு விருது கிடைத்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் எல்லோருக்கும் எல்லாம் என்னும் கொள்கைபடி கூட்டுறவு அமைப்புகள் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான உணவு பாதுகாப்பை உறுதி செய்கின்றன. மத்திய அரசின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று கூட்டுறவுத் துறை மூலம் தமிழகம் இந்தியாவில் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.