புதுடெல்லி: மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவை மேக் இன் இந்தியா திட்டம் உற்பத்தி மையமாக மாற்றவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அது, ஒரு கட்டுக்கதை திட்டமாக மாறிவிட்டது. மேக் இன் இந்தியா திட்டம் உண்மையில் உற்பத்தி மையமாக உருவெடுப்பதற்கு அடிப்படையிலிருந்து மாற்றம் தேவை.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான தொலைக்காட்சிகளின் 80 சதவீத உதிரிபாகங்கள் சீனாவில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? . மேக் இன் இந்தியா திட்டம் என்பது அந்த உதிரிபாகங்களை வெறுமனே ஒன்று சேர்க்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறது. மாறாக அந்த திட்டம் இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவாக்கவில்லை.
ஐபோன் முதல் டிவி வரை: ஐபோன்கள் முதல் டிவி வரை அதற்கான பாகங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்துதான் வருகின்றன. மேக் இந்தியா பெயரை சொல்லி அந்த பாகங்களை நாம் ஒன்றாக ஒருங்கிணைத்து பொருட்களை உருவாக்குகிறோம்.
சிறு தொழில்முனைவோர்கள் பொருட்களை உற்பத்தி செய்ய அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால், அதற்கான கொள்கை ஆதரவை மத்திய அரசு வழங்கவில்லை. அதற்கு பதிலாக, அதிக வரி மற்றும் சில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகம் நாட்டின் தொழில்துறையை பீடித்திருக்கின்றன.
இந்தியா உற்பத்தியில் தன்னிறைவு பெறாவிட்டால் வேலைவாய்ப்புகள், வளர்ச்சி என்பது வெறும் வெற்று வார்த்தைகளாகவே இருக்கும். இந்தியா ஒரு உண்மையான சக்திவாய்ந்த உற்பத்தி மையமாக மறுவதற்கும், சீனாவுடன் சமமாக போட்டி போடுவதற்கும் அடிப்படை மாற்றம் தேவை. அதனை உருவாக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.