நாகப்பட்டினம்: திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, நாகை அவுரித் திடலில் நேற்று மாலை பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: திமுக ஆட்சியில் எந்த பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. அவரது குடும்பத்தினர் பற்றித்தான் கவலைப்படுகிறார்.
அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன அதிகாரம் கொடுக்க வேண்டும் என்கிற சிந்தனைதான் அவரிடம் உள்ளது. இதற்கெல்லாம் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு கட்டும். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக பொன்விளையும் பூமியை தாரை வார்க்க முயன்றார்கள். அப்போது அதிமுக அரசு, மத்திய அரசுடன் பேசி, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கும். நான் முதல்வராக இருந்தபோது கடும் வறட்சி. குடிப்பதற்குகூட தண்ணீர் இல்லை. அதற்கு அடுத்த வருடம் கஜா புயலால் பலத்த சேதம். பின்னர் கரோனா பரவலால் ஒரு வருடம் யாரும் வீட்டை விட்டு நகர முடியவில்லை. இப்படிப்பட்ட காலகட்டத்தில்கூட விலைவாசி உயரவில்லை. ஆனால், தற்போது நிர்வாகத் திறமை இல்லாமல், மக்களின் பிரச்சினைகள் தெரியாமல் இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடந்த அதிமுக ஆட்சியில் நாகை மாவட்டம் பூதங்குடி கிராமத்தில் தடுப்பணை கட்ட திட்டமிட்டோம். ஆனால், தற்போது உத்தமசோழபுரம் கிராமத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. இதனால் கடல் நீர் உள்வாங்கி, 32 கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, பூதங்குடியிலேயே தடுப்பணை கட்ட வேண்டும். திமுகவினருக்கு ஆதரவாக திட்டம் தீட்டினால், அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, வேளாங்கண்ணி பேராலயத்தில் பழனிசாமி சிறப்பு பிரார்த்தனை செய்தார். அப்போது, பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.