திருவாரூர்: 2019 மக்களவைத் தேர்தலின்போது திமுகவிடம் தேர்தல் செலவுக்காக மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கியது. அதில் ஒரு சிங்கிள் டீ கூட கட்சித் தொண்டர் குடிக்கவில்லை என்று கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கம்யூனிஸ்ட் கட்சியினரை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
மோடியும், அமித்ஷாவும் ஆட்டுவித்தால் ஆடக்கூடிய தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாக செயல்பட்டு வரும் அவர், கம்யூனிஸ்ட்கள் எதற்காகவும் போராடவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது வேடிக்கையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களை பாதிக்கும் விஷயங்களை மேற்கொண்டால், உடனடியாக அதை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். எனவே, கம்யூனிஸ்ட்களுக்கு சொல்லித் தரக்கூடிய இடத்தில் அவர் இல்லை. அவர் சொல்லி, கேட்கக்கூடிய இடத்திலும் நாங்கள் இல்லை.
கடந்த 4 ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் தமிழகத்தில் எத்தனை போராட்டங்களை அவர் நடத்தியுள்ளார். தற்போது தேர்தல் வருவதால், ஆங்காங்கே சில ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். நாங்கள் திமுகவிடம் பணம் வாங்கியதாக பழனிசாமி கூறுகிறார். 2019 மக்களவைத் தேர்தலின்போது நாங்கள் போட்டியிட்ட2 தொகுதிகளின் செலவுக்குத்தான் திமுக பணம் கொடுத்தது. அதை வாங்கி தேர்தல் செலவுக்கு கொடுத்து விட்டோம். மறைமுகமாக அதை வாங்கவில்லை. அந்த செலவுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் வரவு செலவில் காட்டப்பட்டுள்ளது.
அந்தப் பணத்தில் இருந்து ஒரு சிங்கிள் டீ கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் சாப்பிடவில்லை. இதுகுறித்து பலமுறை நாங்கள் விளக்கம் அளித்துவிட்டோம். இருப்பினும், வேண்டுமென்றே ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.