சென்னை: ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு பொருட்கள் விற்பனை, விநியோகத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு க்யூஆர் குறியீடு கொண்ட அடையாள அட்டை வழங்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ரயில்கள், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான குடிநீர், உணவு, சிற்றுண்டி, குளிர்பானம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை, விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர்கள் இனி கட்டாயம் க்யூஆர் குறியீடு கொண்ட அடையாள அட்டை வழங்க வேண்டும்.
அதில், ஊழியர் பெயர், ஆதார் எண், ஒப்பந்ததாரர் பெயர், செல்லத்தக்க தேதி, காவல் துறை சரிபார்ப்பு தேதி உள்ளிட்ட அடிப்படை விவரங்களுடன் ரயில் நிலைய மேலாளர் அல்லது ஐஆர்சிடிசி அதிகாரிகளின் கையெழுத்தும் இருக்க வேண்டும்.
அடையாள அட்டை இன்றி பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணியில் இருந்து விலகுவோர் தாங்கள் பெற்ற உரிமத்துடன் அடையாள அட்டையை சரண்டர் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோத உணவு பொருட்கள்: இதுகுறித்து ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் மனோகரன் கூறியதாவது: ரயில்கள், ரயில் நிலையங்களில் சட்டவிரோத உணவு பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தவும், ஊழியர்கள் என்ற போர்வையில் ரயில்வே வளாகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தரமற்ற பொருட்கள் விற்பனை, பொருட்களை அதிக விலைக்கு விற்பது போன்ற புகார்கள் எழுந்தால், நடவடிக்கை எடுப்பது எளிது.
வழக்கு பதிவு: உணவு விற்பனையில் அனுமதித்த எண்ணிக்கையைவிட அதிக அளவில் ஊழியர்களை ஒப்பந்ததாரர்கள் ஈடுபடுத்துகின்றனர். அவர்களுக்கு ரயில்வே போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.
இருப்பினும், அபராதம் செலுத்தி இவர்களை ஒப்பந்ததாரர்கள் வெளியே கொண்டுவந்து விடுகின்றனர். அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டால், இதுபோன்ற முறைகேடுகள் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.