சென்னை: உச்ச நேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26 ஆயிரம் டி.ஓ.டி மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையம் பீக் ஹவர் எனப்படும் உச்ச நேரங் களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க மின்சார நுகர்வோர் விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த மாற்றப்பட்ட விதி களை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த உத்தரவிட்டது.
தமிழகத்தில் வீடுகள், குடிசை போன்ற பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வணிக இணைப்புகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
உச்ச நேர கட்டணம்: தமிழகத்தில் தினமும் காலை, மாலையில் சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்; மற்ற நேரங்களில் 15 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் நுகர்வு இருக்கிறது. இதனால் தொழிற்சாலை போன்றவற்றில் காலை, மாலையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, பீக் ஹவர் சார்ஜ் எனப்படும், உச்ச நேர கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, காலை 6 முதல் 10 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையும் உச்ச நேர மின் கட்டணமாக, ஒரு யூனிட் கட்டணத்துடன் 25 சதவீதம் கூடுதலாகச் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு யூனிட் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதற்கு ஏற்ப உச்ச நேரம், சலுகை நேரம், மற்ற நேர மின் பயன்பாட்டை தனித்தனியே கணக்கெடுக்க டி.ஓ.டி. மீட்டர் பொருத்தப்படுகிறது.
26 ஆயிரம் இணைப்புகளுக்கு… தற்போது உயரழுத்த மின் இணைப்புகள், வணிக இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் இந்த டி.ஓ.டி. மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் தாழ்வழுத்தப் பிரிவுகளில் 42 லட்சம் இணைப்புகளுக்கு இந்த மீட்டர் பொருத்தப்படாமல் உள்ளது. இதில் 26 ஆயிரம் இணைப்புகளுக்கு டி.ஓ.டி. மீட்டர் பொருத்த மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம், சென்னை (வடக்கு), வேலூர், கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 மண்டலங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள 26 ஆயிரம் மும்முனை டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதிலாக டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த வேண்டும் என அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் மின் வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மண்டலத்தில் 5 ஆயிரம் மீட்டர்கள், கோவையில் 3,500, சென்னை (வடக்கு) 3 ஆயிரம், மதுரையில் 2500 மீட்டர்களை டி.ஓ.டி. மீட்டர்களாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் அந்தந்த மண்டலங்களுக்கு ஒதுக்கீடு செய்த மீட்டர்களை சரியாகப் பயன்படுத்தி தாழ்வழுத்த பிரிவில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் மீட்டர்களை அகற்றிவிட்டு புதிய டி.ஓ.டி. மீட்டர்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.