பாலக்காடு: கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.
மலம்புழா, மங்களம், சிறுவாணி, மீன்காரா உள்ளிட்ட அணைகள் நிரம்பும் நிலையில் இருப்பதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பத்தனம்திட்டா, காசர்கோடு மாவட்டங்களில் உள்ள மணிமாலா, மோக்ரல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை யில் மிக கனமழை பெய்யும். மஞ்சள் எச்சரிக்கை என்றால் 6 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.