திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளது திருவள்ளூர் மாவட்ட காவல் துறை.
சந்தேக நபரின் புகைப்படம் மற்றும் வீடியோவை திருவள்ளூர் மாவட்ட போலீஸார் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த பதிவில் சந்தேக நபர் குறித்த அடையாளம் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்குமாறு திருவள்ளூர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர் பின் தொடர்ந்து, அவரை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தப்பி ஓடினார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சிறுமி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிறுமியின் உடல்நிலை சீரானதால் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
தலைமறைவாக உள்ள குற்றவாளியை கைது செய்ய தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடிவரும் நிலையில், இந்த குற்றத்தில் தொடர்புடையதாக போலீஸார் சந்தேகிக்கும் சந்தேக நபரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இப்புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றில் இடம்பெற்றுள்ள சந்தேக நபர் ஒரு குழந்தை மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர் ஆவார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் 9952060948 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். pic.twitter.com/Xu2AGmc7EC