சென்னை: புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், மீட்டர் வாடகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை அரசே ஏற்று, மின் வாரியத்துக்கு மானியமாக வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதேபோல, குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர், விசைத்தறி நுகர்வோர், 50 கிலோவாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு மின்கட்டண உயர்வு இருக்காது என்றும், மற்ற தொழில்துறை மற்றும் வணிகப் பிரிவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய மின் இணைப்பு, மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை மற்றும் மும்முனைப் பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும் புதிய மின் இணைப்பு வழங்க, மீட்டர் வைப்புத்தொகை, மின் பயன்பாடு வைப்புத்தொகை, வளர்ச்சிக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணத்தை, மின் வாரியம் வசூலிக்கிறது.
மின் பயன்பாட்டுக் கட்டணம் மட்டுமின்றி, பல்வகை சேவை கட்டணங்களையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 3.16 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டது. இந்நிலையில், ஜூலை 1-ம் தேதிக்கு முன் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு பழைய சேவைக் கட்டணமும், 1-ம் தேதிக்கு பின் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் வாரிய சேவைக் கட்டணங்களும் வசூலிக்க மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.