நாமக்கல்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜகூ முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என்பதில் குழப்பமில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மறைந்த மூத்த தலைவர் ஆடிட்டர் ரமேஷின் 12-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அண்ணாமலை பேசும்போது, “ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு விசாரணையை அமித்ஷா உள்ளிட்டோர் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். விரைவில் நீதி கிடைக்கும்” என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி, கிட்னி மோசடிசெய்த சம்பவத்தில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயிலாடுதுறையில் பிரஸ்மீட் நடத்தும் அளவுக்கு டிஎஸ்பி சென்றுள்ளார். காவல் துறையின் அத்துமீறல்களே இதற்கு காரணம். இதுகுறித்து விசாரிக்காமல், அவரை சஸ்பெண்ட் செய்வது நியாயமல்ல. தமிழக அரசு நிர்வாகம் சீர்குலைந்துள்ளதையே இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, சம்பந்தப்பட்ட டிஎஸ்பிக்கு நியாயமும், நீதியும் வழங்க வேண்டும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதன் ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவதுதான். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என்பதை அறிவித்துவிட்டோம். இதில் எந்த குழப்பமும் இல்லை. காமராஜரை விமர்சித்ததையடுத்து, திமுக கூட்டணியில் தொடரலாமா அல்லது விலகலாமா என்ற மனநிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.