இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார் ‘சயாரா’ இயக்குநர் மோகித் சூரி.
இந்தியில் மோகித் சூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘சயாரா’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அலியா பட், மகேஷ் பாபு உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இப்படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ‘அனிமல்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார் மோகித் சூரி.
இது தொடர்பாக பேட்டியொன்றில், ‘அனிமல்’ படம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததால் சந்தீப்புக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தாக கூறியிருக்கிறார் மோகித் சூரி. ஆனால், அப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்ததால் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்காக சந்தீப் ரெட்டி வாங்காவிடம் மன்னிப்புக் கோருவதாக மோகித் சூரி கூறியிருக்கிறார்.
ஒரு கதையை சந்தீப் ரெட்டி வாங்கா அணுகும் விதம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், ‘அனிமல்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது உழைப்பு தெரிந்தது என்று மோகித் சூரி தெரிவித்துள்ளார். அவரது தீவிர ரசிகன் நான் என்று சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.