மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் முறைகேடாக வணிகக் கட்டிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியை ஆணையர் சித்ரா, தனிக் குழுவை அமைத்து மறு ஆய்வு செய்து வருகிறார்.
இதுவரை 200 திருமண மண்டபங்களை, குடியிருப்பு கட்டிடங்களாக காட்டி சொத்துவரி வசூல் செய்து வந்தது, ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் வணிக வளாக கட்டிடங்கள், குடியிருப்புகள் உட்பட 4 லட்சத்து 74 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.263 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், மாநகரில் உள்ள வணிக கட்டிடங்களை ஒப்பிடும் போது, இந்த வருவாய் குறைவாகவே இருப்பதாகவே கடந்த காலங்களில் குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், எந்த அதிகாரிகளும் இந்த வருவாயை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்காததால் சொத்து வரி ஏய்ப்பால் மாநகராட்சிக்கு மிகப் பெரியளவி்ல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. 2024-ம் ஆண்டு 150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்து முறைகேடு செய்ததாக, அப்போதைய ஆணையர் தினேஷ் குமார், 5 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார்.
அதன் பிறகு அரசியல் அழுத்தத்தால் 5 பேரின் தற்காலிக பணி நீக்கம் ரத்தானது. போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் பல மாதங்கள் கிடப்பில் போட்டனர். ஆணையர் சித்ரா, தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு அனுமதி வழங்கியதும், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட 19 பேரை ஆணையர் சித்ரா பணி நீக்கம் செய்துள்ளார்.
5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஆனாலும், இந்த முறைகேட்டில் தற்போது நடவடிக்கைக்கு உள்ளானோர் மட்டுமே ஈடுபட்டதாக தெரியவில்லை, இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் அழுத்தம் இருப்பதாகவும், அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்றும் அதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் சித்ரா, 100 வார்டுகளிலும் திருமண மண்டபங்கள், பெரிய வணிக வளாக கட்டிடங்களை மறுஆய்வு செய்வதற்கு துணை ஆணையர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் தனிக்குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
அந்த குழு வீட்டுவரி நிர்ணயம் செய்த முக்கிய வணிக கட்டிடங்களை கண்டறிந்து அந்த கட்டிடங்களின் பட்டியலை அந்தந்த வார்டு வருவாய் பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைத்து நேரடியாக கள ஆய்வு செய்து வருகிறது. தவறுகள் உறுதி செய்யப்படும் முக்கிய வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரியை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆணையரின் இந்த நடவடிக்கையால், சொத்துவரியில் முறைகேடு செய்த வணிக கட்டிட உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய் பிரிவு அதிகாரிகள் சிலர் கூறுகையில், ”முக்கிய வணிக கட்டிடங்களை அடையாளம் கண்டு, அதற்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரியை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறார்கள். அதில், 200 திருமண மண்டபங்கள், வணிக சொத்துவரி கட்டாமல் வீடுகளுக்கான சொத்துவரி கட்டி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றனர்.
10 சதவீதம் சொத்து வரி வருவாய் அதிகரிக்கும்: திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் போன்ற முக்கிய வணிக கட்டிடங்கள் இந்த முறைகேட்டில் சிக்கியிருப்பதால் அவற்றுக்கான சொத்து வரியை மறுசீரமைப்பு செய்வதன் மூலம் மாநகராட்சிக்கு தற்போது கிடைக்கும் சொத்துவரி வருவாயிலிருந்து (ரூ.263 கோடி) 10 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து வரி முறைகேடு சர்ச்சைகளுக்குப் பிறகு சரியான வருவாயை மீட்டெடுக்க தமிழக அரசு முழு ஒப்புதலை மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கி உள்ளதால், இந்த ஆய்வு விவகாரத்தில் கவுன்சிலர்கள் முதல் முக்கிய ஆளும் கட்சி அதிகார மையங்கள் தலையிட முடியாமல் ஒதுங்கி கொண்டனர்.
அதனால், கட்டிட முறைகேடுகளில் சிக்கிய பெரும் வணிக கட்டிட உரிமையாளர்கள், யாரிடமும் சிபாரிசுக்கு செல்ல முடியாமலும், வரியை குறைக்க மொத்தமாக பணம் கொடுத்தவர்களிடம் திரும்ப கேட்டும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இழந்த வருவாய் மீட்கப்பட்டால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெரிய வெற்றியும், மக்களின் பாராட்டும் கிடைக்கும்.