திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருத்தணியில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. காவடி மண்டபத்தில் உற்சவர் முருகன் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இன்று அதிகாலை முதல் தமிழக பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் வந்த பல ஆயிரம் பக்தர்கள் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல வகையான காவடிகளை சுமந்து வந்து, தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.