நத்தம்: நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கருத்தலக்கம்பட்டியில் கிராமமக்கள் பங்கேற்ற மீன்பிடித்திருவிழா இன்று (ஜூலை 20) நடைபெற்றது. திரளானோர் கலந்துகொண்டு மீன்களை பிடித்துச்சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுக்குறிச்சி ஊராட்சியில் உள்ளது கருத்தலக்கம்பட்டி கிராமம். இங்கு 20 ஏக்கர் பரப்பில் சத்திரகண்மாய் உள்ளது. ஆண்டுதோறும் கண்மாயில் நீர்வற்றும்போது மீன்பிடித்திருவிழா நடத்துவது வழக்கம். இதையடுத்து தற்போது கண்மாயில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் கிராமமக்களின் ஒற்றுமையை விளக்கும் வகையில் மீன்பிடித்திருவிழா நடத்த கிராமமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து சுற்றுப்புற கிராமமக்களுக்கும் மீன்பிடித்திருவிழாவில் கலந்துகொள்ள கருத்தலக்கம்பட்டி கிராம மக்கள் அழைப்பு விடுத்தனர்.
இன்று காலை கருத்தலக்கம்பட்டி மற்றும் இதன் சுற்றுப்புற கிராமங்களான கும்பச்சாலை, புதூர், குரும்பபட்டி, நல்லூர், கரையூர், சக்கபிச்சம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் இன்று கருத்தலக்கம்பட்டி கண்மாயில் திரண்டனர்.
ஒரே நேரத்தில் அனைவரும் கண்மாயில் இறங்கி கச்சா, வலை, கூடை வலை உள்ளிட்டவைகளை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் ஜிலேபி, கெண்டை, ரோகு, பாப்லெட் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. அதிகபட்சமாக 10 கிலோ எடைகொண்ட ஒரே மீன் பிடிபட்டது.
மீன்களை பிடித்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று சமைத்து உண்டனர். உறவினர்களுக்கும் வழங்கினர். கருத்தலக்கம்பட்டி கிராமத்தில் இன்று அனைத்து வீடுகளிலும் மீன்குழம்பு என்பதால், கிராமத்தில் மீன்குழம்பு வாசனை வீசியது.