ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரசுக்கும் ஆசை உண்டு என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலில் வெற்றி பெற்று ஆளும்கட்சியாக அதிமுகவும், எதிர்க்கட்சியாக பாஜகவும் அமரும் என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். அவருக்கு கவலையே வேண்டாம். தமிழகத்தில் பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் தோற்றுவிடுவர்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், அதிமுகவுக்கு கிடைக்கக் கூடிய வாக்குகள் கூட குறைந்துவிடும். திமுக வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை சேர்ப்பதை வரவேற்கிறேன். அதை காங்கிரஸும் பின்பற்ற வேண்டும். ‘மிஸ்டு கால்’ மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பதை நான் ஏற்பது இல்லை. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்ததில்லை. ஆனாலும் ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரசுக்கும் ஆசை உண்டு.
பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியில் பங்கு பெறுவது அல்லது ஆந்திராவைபோல் பெரும்பான்மை கிடைத்தாலும் ஆட்சியில் பங்கு கொடுப்பது என 2 மாடல்கள் உள்ளன. அதை இன்றே பேச வேண்டிய அவசியமில்லை. தேர்தலுக்கு பிறகு பேசிக் கொள்ளலாம்.
காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசியது தொடர்பாக முதல்வர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதை பற்றி அண்ணாமலை கவலைப் பட வேண்டாம். அவருக்கு பாஜகவில் எதிர்காலம் இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி மட்டும் கவலை படட்டும். இவ்வாறு அவர் கூறினார்.