புதுமுகங்கள் நடித்து வெளியாகியுள்ள ‘சயாரா’ படத்தின் வசூல் பாலிவுட் திரையுலகினரை மலைக்க வைத்துள்ளது.
மோகித் சூரி இயக்கத்தில் அகன் பாண்டே மற்றும் அனீத் படா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சயாரா’. நாயகன் மற்றும் நாயகி இருவருமே இப்படத்தின் மூலமாக தான் அறிமுகமாகிறார்கள். இப்படத்தினை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் முதல் நாள் பாலிவுட் திரையுலகினரை மலைக்க வைத்துள்ளது.
முதல் நாளில் 20.75 கோடி, 2-வது நாளில் 23.50 கோடி என வசூல் செய்திருக்கிறது. இந்த வசூல் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. BOOK MY SHOW டிக்கெட் புக்கிங் தளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7.25 லட்சம் டிக்கெட்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியாகி பலரையும் மலைக்க வைத்துள்ளது.
ஒரு மணிநேரத்திற்கு 40,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் தொடர்ச்சியாக புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்றால் கண்டிப்பாக ‘சயாரா’ திரைப்படம் 200 கோடி வசூலை எளிதாக கடக்கும் என்கிறார்கள். இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டில் இப்படம் பெரும் வசூல் செய்து வருகிறது. இந்த ஆண்டு ‘சாவா’ படத்துக்குப் பிறகு 200 கோடி வசூலை கடக்கும் 2-வது படமாக இது அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.