பதின்ம வயதினரை தவறாக சித்தரிக்கும் ‘பேட் கேர்ள்’ டீசரை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 26.1.2025-ல் யூடியூப், இணையத்தில் ‘பேட் கேர்ள்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் பதின்ம வயதினர் பற்ற தவறாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன்லைனில் உள்ளது. இது போன்ற காட்சிகள் குழந்தைகள் ஆபாசம், குழந்தை பாலியல் சுரண்டல் ஆகிய பிரிவுகளுக்குள் வரும் குற்றமாகும். எனவே, இந்த ஆபாசமான டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்..
இந்த வழக்கில் நீதிபதி தனபால் நேற்று தீர்ப்பளித்தார். அதில், சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் உள்ள ‘பேட் கேர்ள்’ டீசரை சமூக ஊடகங்களிலிருந்து, உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு மாதத்தில் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற ஆபாச காட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மனுதாரர் தனியாக உரிய அலுவலரிடம் மனு அளித்து நிவாரணம் பெறலாம் என உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.