சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை வாயிலாக விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “கூட்டுறவுத் துறை மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய நலிந்த பிரிவு மக்களுக்கு நன்மைகளைச் செய்வதற்கு உருவான ஒரு துறை. இத்துறை மூலம் பல பணிகள் நிறைவேற்றப்பட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது, நாடும் வளர்ந்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் முக்கிய பணி பொதுமக்களுக்கும் தொழில் அமைப்புகளுக்கும் கடன் வழங்கி முன்னேற்றங்களுக்கு வழி வகுப்பதே ஆகும். அரசு, கூட்டுறவு அமைப்புகள் மூலம் மக்களுக்குக் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. கடன்களால் மக்கள் சிரமப்பட நேரும் காலங்களில் கடன்களை ரத்து செய்தும் உதவுகிறது அரசு.
முதல்வர் ஸ்டாலின் 2021 தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று 31.3.2021 வரை நிலுவையிலிருந்த நகைக் கடன் தொகை ஏறத்தாழ 6,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்து ஆணையிட்டார். அதன்படி, 11.70 இலட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவிற்குத் தள்ளுபடிச் சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டன.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில், 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு 1,01,963 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 10,56,816 மகளிர் பயன்பெற்றுள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.20 இலட்சம் என்பதை ரூ.30 இலட்சமாக உயர்த்தி 1,90,499 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,997.07 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-2022 ஆம் ஆண்டு முதல் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த இதர பணிகளுக்குப் பராமரிப்புக் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தினார். 11,88,440 விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.6,372.02 கோடி கடன் வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு. ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் 19,358 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.63.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளைச் சுயசார்புடையவர்களாக மாற்றவும், நிதி சுதந்திரத்தை வளர்க்கவும், 47,221 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.225.94 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதியை மேம்படுத்தும் வண்ணம் 16,578 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.470.01 கோடியும், 49,000 மகளிர் தொழில் முனைவோருக்கு ரூ.283.27 கோடியும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்குக் கடன்: நாட்டுப்புறக் கலைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு தொழில் புரிகின்ற கலைஞர்கள் நலிவடையாமல் காத்திட அக்கலைஞர்களின் சமூக, பொருளாதார, நிதி நிலையை மேம்படுத்தும் வண்ணம், இதுவரை 4,494 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.18.80 கோடி அளவிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டம்: முதல்வர் பட்டியல் வகுப்பினர் / பட்டியல் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டம் என்னும் சிறப்புத் திட்டத்தை, 1.4.2023 முதல் நடைமுறைப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம், ரூ.52.34 கோடி கடன் உதவியுடன் துப்புரவுப் பணியாளர்களையும் தொழில் முனைவோராக்கும் வகையில், கொள்முதல் செய்யப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனங்களை 86 துப்புரவுப் பணியாளர்களுக்கு 6.12.2024 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், வழங்கிப் பாராட்டினார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிலிருந்து வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.565.42 கோடி மதிப்பிலான 5,420 திட்டப்பணிகள் 2,841 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களால் நிறைவேற்றப்பட்டு அவை பல் சேவை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரங்களைக் கூட்டுறவுத்துறையின் “Coopஇ-வாடகை” செயலி, வேளாண்துறையின் “உழவர்” செயலி ஆகியவற்றிலும், நேரிலும் முன்பதிவு செய்துகொண்டு, ஏறத்தாழ 2 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
தானிய ஈட்டுக்கடன்- நகைக்கடன்: வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், ரூ.392.52 கோடி அளவிற்குத் தானிய ஈட்டுக் கடன்களும்; ரூ.2,089.90 கோடி அளவிற்கு நகைக்கடன்களும் வழங்கியுள்ளன. இச்சங்கங்கள், ரூ.10,283.21 கோடி அளவிற்கு வணிகமும் செய்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆகிய இரு கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டணங்கள் 2021-2022, 2022-2023 ஆகிய ஆண்டுகளுக்கு ரூ. 38.50 இலட்சம் தள்ளுபடி செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் 2022-2023ஆம் கல்வியாண்டில் இருபாலரும் பயிலக் கூடிய ஒரு புதிய கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2.9.2022 அன்று தொடங்கப்பட்டு, 5 பிரிவுகளில் 223 மாணவர்களும், 2023-2024ஆம் கல்வியாண்டில் 7 பிரிவுகளில் 252 மாணவர்களும் சேர்க்கப்பட்டு 1,100 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
2022-ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 5,748 விற்பனையாளர்கள் 981 கட்டுநர்கள் என மொத்தம் 6,729 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2023-ஆம் ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களில் 2,403 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
2024-ஆம் ஆண்டில் 2,527 விற்பனையாளர் மற்றும் 826 கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக 7.10.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. விற்பனையாளர் பணியிடத்திற்கு 2,47,306 விண்ணப்பங்களும், கட்டுநர் பணியிடத்திற்கு 35,421 விண்ணப்பங்களும் பெறப்பட்டு சென்னையைத் தவிர 37 மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.
இதுவரை 9,132 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டும், 3,353 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கும் தொடர்புடைய மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள்: 2021-2022 சட்டமன்றப் பேரவை அறிவிப்பின்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாநிலம் முழுவதும் ஒரே விதமான வண்ணம் மற்றும் தனித்துவமான பெயர்ப் பலகைகளுடன் 70 புதிய மாதிரி கூட்டுறவு மருந்தகங்கள் 16.12.2021 அன்று திறந்து வைக்கப்பட்டு; ரூ. 39.87 கோடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
1000 முதல்வர் மருந்தகங்கள்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2024 ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா உரையில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும் இதன் மூலம் ஜெனரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள், நியூட்டராசெட்டிகல்ஸ், இந்திய மருந்துகள் 25 சதவீத தள்ளுபடி விலையில் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்கள். இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்கள் திட்டம் 24.2.2025 அன்று சென்னை மாநகரில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டன.
புதுடெல்லியில் நடைபெற்ற கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணைய விழாவில் 2022 மற்றும் 2023 ஆகிய இரு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கூட்டுறவுச் சங்கங்களின் கிடங்குகளைக் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் (WDRA) பதிவு செய்ததைப் பாராட்டி, இந்திய அரசின் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம் தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளின் சிறப்பான நிர்வாகத்தைப் பாராட்டி 2024-இல் 5 விருதுகள் வழங்கியது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.