சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், கடந்த 1991-98 கால கட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக விஷ்ணு வர்த்தன் கிரானைட்ஸ் நிறுவனம் மற்றும் அதன் பங்கு தாரரான ராம கிருஷ்ண பிரசாத், வங்கி தலைமை மேலாளர் சுப்புராமன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ராமகிருஷ்ண பிரசாத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1.55 கோடி அபராதம் விதித்தும் கடந்த 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதேபோல இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி வங்கியின் தலைமை மேலாளர் சுப்பு ராமனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராமகிருஷ்ண பிரசாத் மற்றும் சுப்புராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக நடந்தது. அப்போது ராமகிருஷ்ண பிரசாத்துக்கு, குற்றச் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்த நீதிபதி, மற்ற பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
அத்துடன் சிபிஐ நீதிமன்றம் விதித்த ரூ.1.55 கோடி அபராதத்தை உறுதி செய்த நீதிபதி, அந்த தொகையை இந்தியன் வங்கியின் மயிலாப்பூர் கிளைக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். மேலும், வங்கி தலைமை மேலாளர் சுப்புராமன், மண்டல அலுவலகம் வாய்மொழியாக தெரிவித்த ஒப்புதலின் காரணமாகவே கடன் கொடுத் திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.