திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிபந்தனைகளுக்கு மாறாக போலி சான்றிதழ்கள் கொடுத்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த வேற்று மதத்தை சேர்ந்த மேலும் 4 ஊழியர்கள் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு வேற்று மதத்தைச் சேர்ந்த சிலர், இந்து பெயர்களை வைத்துக் கொண்டு, எஸ்சி, எஸ்டி என போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து பிரச்சினை எழவே, சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி தேவஸ்தானம் தனிநபர் ஒப்புதல் படிவத்தை அனைத்து ஊழியர்களிடமும் கேட்டு வாங்கியது. அதன்படி அனைவரும் தாங்கள் இந்துக்கள்தான் என கையொப்பமிட்டு படிவத்தை நிரப்பி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியை தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி வந்ததும், அதிகாரிகளும், அறங்காவலர் குழுவும் மாறியது. இந்நிலையில், இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தைச் சேர்ந்த ஊழியர்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 22 வேற்று மத ஊழியர்கள் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் புத்தூரில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தது தெரியவரவே, ஒரு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்தனர். இதனை தொடர்ந்து, நேற்று எலிசார் எனும் குவாலிட்டி கண்ட்ரோல் பொறியாளர், தேவஸ்தானத்துக்கு சொந்தமான ‘பேர்ட்’ மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்த ரோஸி, பிரேமாவதி, ஆயுர்வேத பார்மஸியில் பணியாற்றி வந்த டாக்டர் அஷுந்தா ஆகிய 4 பேரை தேவஸ்தானம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இவர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி நிரந்தர பணியிடை நீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.