“கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுங்க… கூட்டாமப் போங்க. அதப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்குச் கொடுக்க வேண்டியதைக் குடுத்துட்டு அப்புறமா கூட்டத்தை கூட்டுங்க. ஆனா, எங்களுக்கு எதுவும் குடுக்காமலேயே மீதி இருக்கிற ஒன்னரை வருசத்தையும் ஓட்டிடலாம்ன்னு மட்டும் கனவு காணாதீங்க. எல்லா கணக்கும் எங்கக்கிட்ட இருக்கு; எங்கள ஏமாத்த முடியாது” திருப்பத்தூர் நகராட்சி திமுக கவுன்சிலர்கள் தான் இப்படி தங்கள் கட்சி சேர்மனுக்கு எதிராகவே ‘கட்டிங்’ பிரச்சினையை எழுப்பி நகர்மன்றக் கூட்டத்தை ஒத்திவைக்க வைத்திருக்கிறார்கள்.
36 வார்டுகளைக் கொண்ட திருப்பத்தூர் நகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் சேர்மனுடன் சேர்த்து 29 பேர் உள்ளனர். அதிமுக-வுக்கு 5 கவுன்சிலர்களும் காங்கிரஸ், பாமக-வுக்கு தலா ஒரு கவுன்சிலரும் இருக்கிறார்கள். நகர்மன்றத் தலைவராக சங்கீதா வெங்கடேஷ் இருக்கிறார். தொடக்கத்தில் இருந்தே திமுக கவுன்சிலர்களால் சங்கீதாவுக்கு தலைவலிதான். எந்தப் பணியைத் தொட்டாலும் அதில் ‘தங்களுக்கானது’ தட்டாமல் வரவேண்டும் என திமுக கவுன்சிலர்கள் சிலர் கறாராக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதைப் பார்த்துவிட்டு, நம்ம பங்கென்ன சொத்தைப் பங்கா என மற்ற கட்சிகளின் கவுன்சிலர்கள் சிலரும், “எங்களையும் கொஞ்சம் ‘கண்டுக்கங்க’ “என ‘இன்கம்மிங் குரல்’ எழுப்பினார்கள். இவர்களின் வாயடைக்க ஆரம்பத்தில் கொஞ்சம் ‘கொடுத்துப் பழகிய’ சேர்மன், ஒரு கட்டத்தில் எதிர்பார்ப்புகள் அதிகமானதால், “அதெல்லாம் முடியாது” என கைவிரித்திருக்கிறார். இதனால், மாதா மாதம் நடத்தப்பட்டு வந்த நகர்மன்றக் கூட்டமானது 3 அல்லது 5 மாதத்துக்கு ஒரு முறை என தள்ளிப் போனது.
இந்தச் சூழலில், நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.5 கோடியை தமிழக அரசு அண்மையில் ஒதுக்கியது. இதற்கான டெண்டர் தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வொர்க் ஆர்டர் போடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி, நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நடைபெறும் என கவுன்சிலர்களுக்கு அஜெண்டா அனுப்பப்பட்டது. இதையடுத்து, 9-ம் தேதி ஆக்ரோஷமாக கிளம்பி வந்த ஆளும் கட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட சிலர், கூட்டரங்கிற்கு வராமல் சேர்மன் அறைக்குச் சென்று அறையைச் சாத்திக் கொண்டு சேர்மனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
அவர்களிடம், “ஏற்கெனவே முந்தைய டெண்டர்களில் உங்களுக்கானதை எல்லாம் செய்துவிட்டோம். இந்த டெண்டர் தொடர்பாக உள்ளூர் கட்சிப் பொறுப்பாளர்கள் தொடங்கி மேல் மட்டம் வரைக்கும் கவனிக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் சிஎம் விசிட் வந்தப்ப 25 லட்சம் வரைக்கும் நான் செலவு செய்திருக்கிறேன். இதையெல்லாம் நான் யாரிடம் போய்க் கேட்பது? இப்போது நீங்களும் வந்து பெரிய தொகையை கேட்டால் நான் என்ன செய்வது? அதுவுமில்லாமல் இந்த டெண்டரை எடுத்திருப்பவர் அமைச்சர் எ.வ.வேலுவால் பரிந்துரை செய்யப்பட்டவர். அப்படி இருக்கையில், என்னால் எப்படி நீங்கள் கேட்பதைச் செய்ய முடியும்?” என தனது இயலாமையை வெளிப்படுத்தி இருக்கிறார் சேர்மன் சங்கீதா வெங்கடேஷ்.

ஆனால், இதையெல்லாம் ஏற்காத கவுன்சிலர்கள், “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது… எங்களுக்குச் சேர வேண்டியதைக் கொடுத்துட்டு அப்புறமா கவுன்சில் கூட்டத்தை கூட்டுங்க. இல்ல, கூட்டாமலேயே போங்க; அதப்பத்தி எங்களுக்கு கவலை இல்லை. ஆனா, எங்களை ஏமாத்தி இன்னும் இருக்கிற ஒன்னரை வருஷத்தை ஓட்டிடலாம்ன்னு மட்டும் கனவு காணாதீங்க” என மிரட்டும் தொனியில் பேசியதால் கவுன்சில் கூட்டத்தை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருக்கிறார் சேர்மன்.
இதையெல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வேதனைப்பட்ட சேர்மன் சங்கீதா, “வழக்கமா எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தான் இப்படி எல்லாம் பிரச்சினை பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, இங்க நம்ம கட்சிக்காரங்களே நெருக்கடி கொடுக்கிறாங்க. இதையெல்லாம் பார்க்கும் போது, ஏன் தான் சேர்மனா வந்தோம்னு இருக்கு. லட்சத்துல செலவழிச்சு பதவிக்கு வந்த இவங்களுக்கே இத்தனை எதிர்பார்ப்பு இருக்கும் போது, கோடிகளை செலவழிச்ச நான் எங்கே போவது?” என்று புலம்பினாராம்.

ஆனால், இதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் நம்மிடம் பேசிய சேர்மன் சங்கீதா வெங்கடேஷ், “கவுன்சில் கூட்டம் காலையில் நடைபெறும் என அறிவித்தோம். கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. கேட்டால், வார்டுக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளில் சில கவுன்சிலர்கள் திருப்தி இல்லை என்றனர். மேலும், வெளியில் சொல்ல முடியாத சில விஷயங்களும் இதில் உள்ளன. இந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்க்க ஒரு நாள் போதாது என்பதால் கூட்டத்தை தள்ளிவைத்தோம்’’ என்றார் கூலாக.
வைஸ் சேர்மன் சபியுல்லாவோ, ‘‘எந்த வார்டில் எது முக்கியப் பிரச்சினை என்பதை வார்டு கவுன்சிலர்களிடம் கேட்டு அதன் பிறகு பணிகளை தேர்வு செய்து அதற்கான நிதியை ஒதுக்கி அதன் பிறகு கவுன்சில் கூட்டத்தை கூட்டுங்கள் என நகராட்சி தலைவருக்கு புரியும்படி(!) அறிவுறுத்தி இருக்கிறோம். அதன்படி அவர் நடந்துகொள்வார் என்று நம்புகிறோம்’’ என்றார்.
இதனிடையே இருதரப்புக்கும் இடையில் நடந்த ‘சமாதான’ பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கடந்த 18ம் தேதி நகர்மன்ற சாதாரண கூட்டம் ‘சுமூகமாக’ நடத்தப்பட்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறியிருக்கின்றன!