லாஸ் வேகாஸ்: ஃப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் லெவன் அரோனியனுடன் மோதினார். இதில் அர்ஜுன் எரிகைசி 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முதல் ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் அர்ஜுன் எரிகைசி விளையாடினார்.
கருப்பு காய்களுடன் விளையாடிய லெவன் அரோனியன் கடினமான சூழ்நிலையில் இருந்த போதிலும் உறுதியாக இருந்தார். அதேவேளையில் அர்ஜுன் எரிகைசி சிறந்த நிலையில் இருந்த போதிலும் அதை பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். இதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட லெவன் அரோனியன் அபாரமாக செயல்பட்டு 39-வது நகர்த்தலில் வெற்றி கண்டார்.
2-வது ஆட்டத்தில் அர்ஜுன் எரிகைசி கருப்பு காய்களுடன் விளையாடினார். இந்த ஆட்டத்தை லெவன் அரோனியன் டிரா செய்தாலே இறுதிப் போட்டியில் நுழைந்து விடலாம் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் சமநிலையில் இருந்ததால் ஆட்டம் டிராவை நோக்கி செல்லும் நிலை இருந்தது.
அந்த சூழ்நிலையில் அர்ஜுன் எரிகைசி ரிஸ்க் எடுத்தார். இதனால் 50-வது நகர்த்தலின் போது அவர், தோல்வியை சந்தித்தார். முடிவில் அர்ஜுன் எரிகைசி 0-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் நீமன் 1.5-2.5 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த ஹிகாரு நகமுராவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தார்.