புதுடெல்லி: சுமார் 1,500 பேருக்கும் அதிகமான பெண்களை முஸ்லிமாக மதம் மாற்றியக் குற்றவாளி சாங்குர் பாபா (எ) ஜலாலுதீன். இவர் உபியின் பல்ராம்பூரில் இருந்தபடி அரபு நாடுகளின் நிதி உதவியால் வட மாநிலப் பெண்களை மதமாற்றம் செய்து வந்துள்ளார்.
கடந்த ஜூலை 4-ல் சாங்குர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்றும் நண்பர்களான நீத்து நவீன் ரொஹரா என்கிற நஸ்ரீன், அவரது கணவர் நவீன் ரொஹரா ஆகியோர் கைதாயினர். நீதிமன்றக் காவலில் உள்ள இவர்களிடம் உத்தர பிரதேச தீவிரவாத தடுப்புபடை (ஏடிஎஸ்) நடத்தும் விசாரணையில் பல அதிர்ச்சியானத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில், இந்த கும்பலுக்கு தமிழ்நாட்டின் சிலருடன் தொடர்பு இருப்பது தெரிந்துள்ளது.
சாங்குர் பாபாவிற்கு உபி, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் வங்கிகளில் 22 கணக்குகள் உள்ளன. இவற்றில் ரூ.60 கோடி ரொக்கம் இருந்துள்ளது. இத்துடன் சுமார் நூறு கோடிக்கும் அதிகமான சொத்தும் வைத்துள்ளார் பாபா. இதனால், சாங்குர் பாபாவின் வழக்கை மத்திய அமலாக்கத்துறை மற்றும் தேசியப் புலனாய்வு நிறுவனமும் (என்ஐஏ) விசாரிக்கிறது. அதில், இவர்களுக்கு சுவிஸ் நாட்டின் வங்கியிலும் கணக்கு இருப்பது தெரிந்துள்ளது.
உபியின் லக்னோ, பல்ராம்பூர், மும்பை ஆகிய 22 நகரங்களில் சாங்குர் பாபாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கடந்த வாரம் சோதனை நடத்தியது. இதில் கிடைத்த ஒரு ஆவணத்தில் பாபா கும்பலுக்கு தமிழகத்துடனும் தொடர்பு இருப்பதும் தெரிந்துள்ளது. உபியின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பெயரில் ரூ.40 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது. பிறகு ஒரு இடைவெளிக்கு பின் இந்த சொத்து குற்றவாளிகளில் ஒருவரான நஸ் ரீன் பெயருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் நன்கொடை ஆக வழங்கி உள்ளார்.
இந்த ஆவணத்தின் மூலம், பாபா கும்பலுக்கு தமிழ்நாட்டிலும் பலருடன் சட்டவிரோத மதமாற்ற வழக்கில் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இதை விசாரிக்க உபியின் ஏடிஎஸ் படை, மத்திய அமலாக்கத்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் சென்னை வர உள்ளனர். தமிழ்நாட்டில் சிலர் மூலமாக சாங்குர் பாபாவிற்கு ஹவாலா வழியாகவும் பணம் வந்திருப்பதாகவும் விசாரிக்க உள்ளனர்.
இந்த வழக்கில் உபியில் கைதான நால்வருடன் மேலும் ஆறு பேர் தேடப்பட்டு வந்தனர். இவர்களில் சாங்குர் பாபாவின் சகோதரி மகனான சப்ராஜ் மற்றும் புத்து என்றழைக்கப்படும் இம்ரான், அவரது நண்பரான சஹாபுத்தீன் ஆகிய இருவரை நேற்று ஏடிஎஸ் கைது செய்துள்ளது.