புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த 4 நாட்களாக இருதரப்பு வர்த்தக பேச்சு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது. 5-ம் சுற்று பேச்சில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இது குறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற அசோசாம் வர்த்தக சபை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. நமது நாட்டுக்கு பயன் அளித்தால் மட்டுமே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். நாட்டுக்கு பயன் இல்லை என்றால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டோம். நாட்டு நலனுக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. நாட்டில் உள்நாட்டு தேவை அதிகளவில் உள்ளது. உள்நாட்டு தொழிலை மேம்படுத்துவதற்காக நாம் பல இறக்குமதிகளை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தொழிலாளர்களிடம் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், “வரி தவிர தங்கள் தொழிலுக்கு பாதிப்பாக இருக்கும் பிற விஷயங்கள் குறித்து தொழில்துறையினர் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார்.