சென்னை: சேரக்கூடாத இடத்தில் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாகவும், அதனால் பழனிசாமியின் அழைப்பை நிராகரிக்கிறோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் நடந்த அதிமுகவின் பிரச்சார கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்களது கூட்டணிக்கு வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறோம் என பேசினார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இரா.முத்தரசன் கூறியதாவது: அதிமுக பாஜகவுடன் உறவில் இருந்த நிலையில், இனி பாஜகவுடன் சேரப்போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார். இப்போது மீண்டும் பாஜகவுடன் இணைந்திருக்கிறார்.
அப்படி இணையவேண்டிய கட்டாயம் என்ன? பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்த ஆட்சியின் அமைச்சரவையில் பாஜக பங்குபெறும் என்றும் கூறியிருக்கிறார்.
ஒரு திரைபடத்தில் நடிகர் வடிவேலு ரவுடிகளை போலீஸார் அழைத்து செல்லும்போது, நானும் ரவுடிதான் எனக்கூறி போலீஸ் வாகனத்தில் ஏறிக்கொள்வார். அதுபோல் பழனிசாமி, நான்தான் கூட்டணிக்கு தலைவர், நான்தான் முதல்வர் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொள்கிறார்.
பாஜக அவரை முதல்வர் வேட்பாளராக இதுவரை அறிவிக்கவில்லை. அமித் ஷாவும் கூறவில்லை. பாஜகவுடன் அதிமுக அணிசேர்ந்தது தவறு என்பதை அக்கட்சியினரே சொல்லி வருகின்றனர்.
சேரக்கூடாத இடத்தில் அதிமுக சேர்ந்திருக்கிறது. இது இயல்பாக அமைந்த கூட்டணி அல்ல. அப்படிப்பட்ட கூட்டணியில் இருந்து கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கூட்டணிக்கு வருமாறு பழனிசாமி அழைக்கிறார்.
இது நகைப்புக்குரியது. அவரது அழைப்பை நிராகரிக்கிறோம். அவரது கூட்டணி வெற்றிபெறாது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.