Last Updated : 20 Jul, 2025 01:14 AM
Published : 20 Jul 2025 01:14 AM
Last Updated : 20 Jul 2025 01:14 AM

கொச்சி: லட்சத்தீவு பகுதியில் ஏராளமான குட்டி தீவுப் பகுதிகள் உள்ளன. இவற்றில் 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். இவற்றில் ஒன்று பிட்ரா தீவு. இங்கு 105 குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்த தீவு அமைந்துள்ள பகுதி நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான இடமாக கருதப்பட்டது. அதனால் இந்த தீவு முழுவதையும் ராணுவத் தேவைகளுக்காக கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து லட்சத்தீவு வருவாய் துறை சார்பில் கடந்த 11-ம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. பிட்ரா தீவின் இருப்பிடம் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான இடமாக கருதப்படுவதால், இந்த தீவு முழுவதையும் பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நில கொள்முதல், மறுவாழ்வு சட்டப்படி, இங்கு வசிக்கும் மக்கள், கிராம சபா உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பிட்ரா தீவில் வசிக்கும் 105 குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. லட்சத்தீவு எம்.பி ஹம்துல்லா சயீத்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
பிட்ரா தீவில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை உள்ளது. இந்த முடிவை நாங்கள் முழுவீச்சில் எதிர்ப்போம். நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக லட்சத்தீவில் மத்திய அரசு ஏற்கெனவே பல தீவுப் பகுதிகளை கையகப்படுத்தியுள்ளது. பிட்ரா தீவில் மக்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். மாற்றுத்திட்டம் பற்றி ஆலோசிக்காமல் மத்திய அரசு முடிவெடுப்பது ஏற்கத்தக்கதல்ல. இது தொடர்பாக பிட்ரா தீவில் வசிப்பவர்களிடம் லட்சத்தீவு நிர்வாகம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பிட்ரா தீவு மக்களுக்கு அவர் அனுப்பியுள்ள வீடியோ செய்தியில், ‘‘ மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பிட்ரா தீவு மக்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் எம்.பி.யாக நான் பிட்ரா மற்றும் லட்சத்தீவு தலைவர்களுடன் இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினேன். இந்த விவகாரத்தை பிட்ரா தீவு மக்களுடன் இணைந்து அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் போராட நாங்கள் முடிவு செய்துள்ளோம்’’ என கூறியுள்ளார்.
FOLLOW US