அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அஜித்தின் திரையுலக வாழ்வில் பெரிய வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையையும் படைத்தது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கலந்துக் கொண்டார். விழாவில் இருந்து கிளம்பும் போது பத்திரிகையாளர்கள் அவரிடம் அஜித் படம் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன், “அடுத்த அஜித் சார் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே சந்தோஷம். ‘குட் பேட் அக்லி’ மாதிரியே அடுத்த படத்தையும் செய்துவிட முடியாது. வித்தியாசமாக பண்ண வேண்டும். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எல்லாம் விரைவில் வெளியாகும்.
‘குட் பேட் அக்லி’ இந்த ஆண்டின் பெரிய வெற்றிப் படம் என்கிறார்கள். அது ரொம்பவே மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதே மாதிரி வேறு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கதையம்சம் உள்ள படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது. மறுபக்கம் கமர்ஷியல் படங்களும் வரவேற்பைப் பெறுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.