புதுடெல்லி: பாகிஸ்தானில் இயங்கும் டிஆர்எப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்திருப்பது, இந்தியா – அமெரிக்கா இடையே உள்ள கருத்து இடைவெளியை குறைக்கும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “பஹல்காம் தாக்குதலுக்கு உரிமை கோரிய லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததை நான் வரவேற்கிறேன். அந்த அமைப்பின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தத்தை இது பாகிஸ்தானுக்குக் கொடுக்கும்.
வாஷிங்டனுக்கான எனது பயணத்தின்போது, பயங்கரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை பாகிஸ்தான் இன்னமும் வழங்கிக் கொண்டிருப்பதை அமெரிக்கா ஏன் வேடிக்கை பார்க்கிறது என நான் கேட்டபோது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, காபூல் விமான நிலையத்தில் 23 அமெரிக்கக் கடற்படையினரைக் கொன்ற அபே கேட் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர் என கூறப்படும் நபர் சமீபத்தில் சரணடைந்ததை எனக்கு சுட்டிக்காட்டினார்கள்.
தங்கள் நாட்டுக்கு விரோதமாக செயல்படும் ஐஎஸ்ஐஎஸ்-கோராசன் அமைப்பு மீது அமெரிக்கா கொண்டிருக்கும் பார்வை என்பது அதன் சொந்த அனுபவத்தில் இருந்து பெற்றது அல்ல. ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகளின் தரம் மற்றும் நேர்மை குறித்த நமது சந்தேகம் என்பது நமது சொந்த அனுபவத்தில் இருந்து வந்தது. தற்போது, டிஆர்எஃப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருப்பது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கருத்துக்களில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு படியாகும். டிஆர்எஃப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஐநா அறிவிக்க இது உதவும்.” என தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலா தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்த டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு நேற்று அறிவித்தது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாகவும்(எப்டிஓ), நியமிக்கப்பட்ட உலகளாவிய தீவிரவாத அமைப்பாகவும் (எஸ்டிஜிடி) அறிவிக்கிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கேட்டும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பைச் செயல்படுத்துவதிலும் அமெரிக்க நிர்வாகம் உறுதியாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறும்போது, “டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவிக்கிறது. இந்தியாவில் பல்வேறு தீவிரவாதச் செயல்களை செய்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ள முடிவுக்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை பாராட்டுகிறேன்.” என தெரிவித்திருந்தார்.