புதுடெல்லி: “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். இந்து பெரும்பான்மை இருப்பதால், சிறுபான்மையினர் முழுமையான சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பெற்று வருகின்றனர்” என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த கிரண் ரிஜிஜு, “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். இந்தியாவில் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் எனவே நாங்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும் கூறும் சிறுபான்மையினர் ஒருவரைக்கூட நான் பார்க்கவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆதரவு பெற்ற இடதுசாரி சுற்றுச்சூழல் அமைப்பு, இந்தியாவில் சிறுபான்மையினர் சித்ரவதை செய்யப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள், அடித்துக்கொல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் இடைவிடாது பிரச்சாரம் செய்து வருகிறது. இதுபோன்ற ஒரு கதையை கட்டமைப்பது நாட்டுக்கு உதவாது.
இந்தியாவில் மக்கள் சட்டத்துக்கு கட்டுப்படுகிறார்கள். நாம் ஒரு மதச்சார்பற்றவர்களாக இருக்கிறோம். நமக்கு ஒரு அரசியல்சாசனம் உள்ளது. இங்கே பெரும்பான்மையினராக இருந்தாலும் சரி, சிறுபான்மையினராக இருந்தாலும் சரி அனைவரும் சட்டத்தின் முன் சமம்தான்.
ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நமது நாட்டில் பெரும்பான்மை சமூகத்தினர் எவற்றையெல்லாம் பெருகிறார்களோ அவற்றையெல்லாம் சிறுபான்மையினரும் பெறுகிறார்கள். அதேநேரத்தில், சிறுபான்மையினர் பெறும் அனைத்தையும் பெரும்பான்மையினர் பெறவில்லை.
நீங்கள் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்தால், சீன ஆக்கிரமிப்பு காரணமாக திபெத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. அதனால், திபெத்தியர்கள் இந்தியாவுக்கு வந்தனர். அதேபோல், மியான்மரில் ஜனநாயக இயக்கங்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதால், ஜனநாயக ஆர்வலர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டதால் அவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டதால் அவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். அதேபோல், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வந்தனர்.
இவர்கள் அனைவருமே இந்தியாவில் தஞ்சம்புக விரும்புகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இந்திய மக்கள் மீதும் நம்பிக்கை உள்ளது. அதனால்தான் அவர்கள் இங்கு வருகிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சிற்சில சம்பவங்கள், கலவரங்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பொதுவாக இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இருப்பினும், கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்ற பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய பிரச்சாரம் இந்தியாவுக்கு எவ்வாறு உதவப் போகிறது? இந்தியாவுக்கு எதை அளிக்கப்போகிறது?
நான் ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன். ஒரு விஷயத்தை மிகவும் வெளிப்படையாகவே கூறுகிறேன். பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இந்துக்கள் 78 முதல் 79 சதவீதம் வரை இருந்தார்கள். புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும்போது இந்த சதவீதம் குறையலாம். ஆனால், இப்போது எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால், இந்து பெரும்பான்மை காரணமாக அனைத்து சிறுபான்மையினரும் இந்த நாட்டில் முழுமையான சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து வருகின்றனர்.
நினைத்துப் பாருங்கள், நாங்கள் பாகிஸ்தானிலோ அல்லது வங்கதேசத்திலோ இருந்திருந்தால் எங்கள் நிலை என்னவாக இருந்திருக்கும். இன்று நாங்கள் அகதிகளாக இருந்திருப்போம். இந்தியாவில் இன்று ஒவ்வொரு பழங்குடி சமூகமும், ஒவ்வொறு சிறுபான்மை சமூகமும் தங்கள் சொந்த தாயகத்தில் பாதுகாப்பாக உள்ளன. ஏனெனில், பெரும்பான்மை இந்து சமூகம் மதச்சார்பற்றதாகவும் இயற்கையாகவே சகிப்புத்தன்மை கொண்டதாகவும் உள்ளது. அதனால்தான், ஒவ்வொரு சிறுபான்மை சமூகத்துக்கும் விருப்பமான இடமாக இந்தியா உள்ளது. நாம் இதைப் பாராட்ட வேண்டும். இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் நாட்டுக்கு மிகப் பெரிய துரோகம் செய்கிறீர்கள்.” என தெரிவித்தார்.