இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் போராடி அதுவும் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியுற்றது. ஆனால் 2015-ல் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் அடைந்த மாபெரும் தோல்வியைப் பற்றி அறிவது இந்திய அணியின் லார்ட்ஸ் தோல்வியை மறக்க உதவும்.
2015 இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடர் என்று அழைக்கப்படும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கார்டிஃபில் நடைபெற்ற போது இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்தது. இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக், ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க்.
இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் ஜூலை 16ம் தேதி தொடங்கியது. மட்டைப் பிட்சில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் 174 ரன்களைக் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 215 ரன்கள் என்று டபுள் செஞ்சுரி கண்டார். ஆஸ்திரேலியா 566/8 என்று டிக்ளேர் செய்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 26 ஓவர்களில் 99 ரன்கள் கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை, பிராட் 4 விக்கெட்டுகளையும் ஜோ ரூட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் அலிஸ்டர் குக், ஜோ ரூட், இயன் பெல், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், மொயின் அலி என்று வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தது. ஆனால் அலிஸ்டர் குக் 96 ரன்கள் எடுத்து மார்ஷ் பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்த சிறந்த ஸ்கோர் பென் ஸ்டோக்ஸ் 129 பந்துகளில் 87 ரன்களை விளாசினார். மொயீன் லை 39, பிராட் 21 என்று ஒருமாதிரி தேற்றி இங்கிலாந்து 312 ரன்களை எடுத்து ஃபாலோ ஆனைத் தவிர்க்கத் தவறியது.
ஜாஷ் ஹேசில்வுட், மிட்செல் ஜான்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் பிட்ச் மட்டைப் பிட்ச் என்பதால் ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் கொடுக்கவில்லை. மீண்டும் பேட் செய்ய முடிவெடுத்தனர். டேவிட் வார்னர் 83, ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஒரு 58 என்று விளாசி அதிவேக முறையில் அதாவது இப்போது பாஸ்பால் என்று பெருமை பீற்றிக் கொள்ளும் ஒரு முறையில் 49 ஓவர்களில் 254/2 என்று ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 ஓவர் 38 ரன்கள் மீண்டும் நோ-விக்கெட்.
4ம் நாள் ஆட்டம் இங்கிலாந்து 509 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியது. ஆனால் என்ன ஆயிற்று? 103 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்டு 405 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வி கண்டது. ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் ஹாசில்வுட் நேதன்லயன் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், மார்ஷ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்ற வெறும் 37 ஓவர்களே தாக்குப் பிடித்தது இங்கிலாந்து.
இந்தப் போட்டியின் சில சுவையான தகவல்கள்:
இந்த லார்ட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெறும் 10 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளையே கைப்பற்ற முடிந்தது, மாறாக ஆஸ்திரேலியா 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.
இந்த ஒட்டுமொத்த டெஸ்ட்டிலும் இங்கிலாந்து எடுத்த ரன்கள் 415. ஆனால் ஆஸ்திரேலியாவின் கிறிஸ் ராஜர்ஸ், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சேர்ந்தே 495 ரன்களைக் குவித்தனர்.
5 செஷன்களில் போட்டியை டிரா செய்ய நேரம் இருந்தது, ஆனால் 37 ஓவர்களில் 2வது இன்னிங்சில் காலியானது இதே நாளில் அன்று.
மிட்செல் ஜான்சன் தொடர் பவுன்சர்களை வீசி இங்கிலாந்து பேட்டர்களை நிலைகுலையச் செய்தார். இந்த பெரிய டெஸ்ட் வெற்றியின் மூலம் 1-1 என்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சமன் செய்த ஆஸ்திரேலியா அடுத்து பர்மிங்ஹாமில் ஆண்டர்சனிடம் சிக்கி 8 விக்கெட்டுகளில் தோல்வி கண்டது.
அதற்கு அடுத்து நாட்டிங்காமில் பயங்கர ஸ்விங்கிங் நிலைமைகளில் ஸ்டூவர்ட் பிராடை ஆட முடியாமல் ஆஸ்திரேலியா 60 ரன்களுக்குச் சுருண்டது நினைவிருக்கலாம். பிராட் 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்று அசாத்தியப் பந்து வீச்சை வெளிப்படுத்தினார். ஆனால் இங்கிலாந்தின் ஜோ ரூட் இதே பிட்சில் 130 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 391/9 என்று டிக்ளேர் செய்தது. ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா பென் ஸ்டோக்சின் பந்து வீச்சுக்குச் சுருண்டது 6 விக்கெட்டுகளை ஸ்டோக்ஸும் 3 விக்கெட்டுகளை பிராடும் கைப்பற்ற ஆஸ்திரேலியா 253 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி கண்டது, 5 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்றுக் கைப்பற்றியது.
கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது, இதில் நாட்டிங்காம் தோல்விக்குப் பழிதீர்க்கக் காத்திருந்த ஆஸ்திரேலியா 481 ரன்களைக் குவித்தது. ஸ்மித் மீண்டும் 142 ரன்களைக் குவித்தார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 149 ரன்களையும் ஃபாலோ ஆன் ஆடி 286 ரன்களையும் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்களில் வெற்றி கண்டது, தொடர் 3-2 என்று இங்கிலாந்து வெற்றியில் முடிந்தது.
அந்த லார்ட்ஸ் தோல்வி இங்கிலாந்துக்கு அப்போது ஜீரணிக்க முடியாத தோல்வியாக அமைந்தது, ஆனால் அடுத்தடுத்த டெஸ்ட்களில் மீண்டெழுந்தது இங்கிலாந்து. அதே போல் இப்போது இந்திய அணியும் மீண்டெழ வேண்டும்.