சென்னை: திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பை சரிவர அள்ளப்படாத காரணத்தால் சுகாதாரச் சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. கொசுக்களை அழிப்பதற்காக நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கொசு மருந்து அடிப்பதில்லை.
மேலும், இப்பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. முறையாக பராமரிக்கப்படுவதும் இல்லை. பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்படுவதில்லை. நகராட்சியின் இதுபோன்ற நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்வது குறித்து, நகராட்சி நிர்வாகத்தை அணுகினால் உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
எனவே, திருநின்றவூர் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் மெத்தனமாக இருந்து வரும் திமுக அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வலியுறுத்தியும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜூலை 25-ம் தேதி மாலை 4 மணிக்கு, திருநின்றவூர் நகர காந்தி சிலை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கட்சியின் இலக்கிய அணிச் செயலாளர் வைகைச் செல்வன் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், அமைப்புச் செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.