சென்னை: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட்டால், எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில், இந்தாண்டு ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருந்தது கூடுதல் சிறப்பு. ஆடி முதல் வெள்ளியான நேற்று சென்னை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் நேற்று காலை முதல் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், கோயில் வளாகத்தில் இருந்த நாக சிலைகளுக்கு பெண்கள் பாலாபிஷேகம் செய்தும், பொங்கலிட்டும் வழிபட்டனர்.
பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் காலையில் வடிவுடையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல், மயிலாப்பூர் கோலவிழி அம்மன், தி.நகர் முப்பாத்தம்மன், பாடி படவேட்டம்மன், வில்லிவாக்கம் பாலி அம்மன், கொரட்டூர் முத்துமாரியம்மன், பாடியநல்லூர் அங்காளபரமேஸ்வரி, பெரம்பூர் லட்சுமி அம்மன், சூளை அங்காளம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், திருமுல்லைவாயல் பச்சையம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் உட்பட சென்னை மற்றும் புறநகரில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அனைத்து கோயில்களிலும் காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பல கோயில்களில் தீமிதி திருவிழாக்கள் நடத்தப்பட்டன. பக்தர்கள் மஞ்சள் நிறை ஆடைகளை அணிந்து, தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆடி வெள்ளியை முன்னிட்டு, பல கோயில்கள் வேப்பிலை, எலுமிச்சை பழங்களால் கோயில் முகப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்புகளால் பாதை அமைக்கப்பட்டிருந்தது.