புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2024-ம் நிதியாண்டில் ரூ.9,741.7 கோாடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இதில், ஐபிஎல் மூலமான வருவாய் முக்கிய ஆதாரமாக உள்ளது புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.அதன்படி ஐபிஎல் மூலமாக பிசிசிஐ-க்கு கிடைத்த வருவாய் பங்குமட்டும் ரூ.5,761 கோடியாக உள்ளது. மேலும், மகளிர் பிரீமியர் லீக் மற்றும் உலகளாவிய உரிமைகள், ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை மூலமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான வருவாய் ஆதாரத்தை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. ஐபிஎல் அல்லாத ஊடக உரிமைகள் மூலமாக மட்டும் பிசிசிஐ ரூ.361 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருமானம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ரஞ்சி கோப்பை, துலீப் டிராபி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமங்களிலிருந்து கிடைத்ததாகும். பிசிசிஐ-யின் வருவாய் பெருக்கத்துக்கு இதுவும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது. இதுகுறித்து விளம்பர நிறுவனமான ரெடிஃபியூஷன் வெளியிட்ட அறிக்கையில், “ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் பிசிசிஐ-க்கு ஒரு தங்க முட்டையிடும் வாத்தாக மாறியுள்ளது இந்த புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. 2024-ம் நிதியாண்டில் பிசிசிஐ-யின் மொத்த வருவாயில் 59 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை ஐபிஎல் வழங்கியதில் இருந்து இதனை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது.
கையிருப்பில் ரூ.30 ஆயிரம் கோடி: பிசிசிஐ-யிடம் தற்போதைய கையிருப்பாக ரூ.30,000 கோடி உள்ளது. இதிலிருந்து ஆண்டுக்கு வட்டியாக மட்டும் ரூ.1,000 கோடி கிடைத்து வருகிறது. ஸ்பான்சர் ஷிப், மீடியா ஒப்பந்தங்கள், போட்டிகள் விரிவாக்கம் மூலம் இந்த வருவாய் ஆண்டுக்கு 10-12 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ரெடிஃபியூசன் தலைவர் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார்.