ஹராரே: ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஹராரேவில் நியூஸிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்லி மாதவரே 32 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார். பிரையன் பென்னட் 21, டோனி முன்யோங்கா 13, கேப்டன் சிகந்தர் ராஸா 12, ரியான் பரூல் 12 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
121 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது 11-வது அரை சதத்தை விளாசிய டேவன் கான்வே 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், டேரில் மிட்செல் 19 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக ரச்சின் ரவீந்திரா 19 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களும், டிம் ஷெய்பர்ட் 3 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.