சென்னை: காமராஜர் குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். விரைவில் தொடங்க உள்ள மக்களவை கூட்டத்தொடரில், மக்கள் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்புவது தொடர்பாக, திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி எம்.பி. டி.ஆர். பாலுவுடன், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதி ஸ்ரீபெரும்புதூர். நாட்டில் அதிகம் ஜிஎஸ்டி வரி செலுத்தும் தொகுதியாகவும் உள்ளது. இங்கு சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்றும், தொகுதி மக்களின் பிரச்சினைகளை ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் மனுவாக பெற்று முதல்வரிடம் கோரிக்கை மனுவாக கொடுத்துள்ளோம். அக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
காமராஜர் குறித்த விவாதம் முடிந்துவிட்டது. அதற்கு நேற்றே முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இந்த விவகாரத்துக்காக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதகதை போன்று உள்ளது.
எங்களை பற்றி அண்ணாமலைக்கு ஏன் கவலை? டெல்லியில் காமராஜரை வீட்டோடு வைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் அதற்குப் பிறகு காமராஜருக்கு பிறந்தநாள் விழா எடுப்பது போன்று ஏன் வேஷம் போடுகிறார்கள். பாஜக-ஆர்எஸ்எஸ் வேஷத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.