சென்னை: “பாஜகவை கழற்றி விட்டு, தமிழக வெற்றிக் கழகத்துடன் சேரலாமா என்ற முயற்சியில் அதிமுக ஈடுபடுகிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிர்ப்பந்தத்தால் ஏற்பட்டதன் விளைவாக கடும் கருத்து வேறுபாடுகள் இரு கட்சிகளிடையே சமீபகாலமாக எழுந்து வருகின்றன. அதிமுகவை பாஜக கூட்டணியில் சேர்ப்பதற்காக உள்துறை அமைச்சர் என்ற முறையில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணிக்கான அறிவிப்பு அமித் ஷாவால் வெளியிடப்பட்டது.
இயல்பாக அதிமுக பெரிய கட்சி என்பதால் கூட்டணி குறித்த அறிவிப்பை அதிமுக தலைமைதான் வெளியிடுவது வழக்கம். ஆனால், அதற்கு மாறாக அமித் ஷா இருக்கும் இடத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டு அங்கே கூட்டணி அறிவிப்பு வெளியானபோது, பேசுவதற்கு கூட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதன்மூலம் தொடக்கத்தில் இருந்தே பூசல்கள் நீறு பூத்த நெருப்பாக இருந்து வருகின்றன. அதன் விளைவாக இன்றைக்கு கூட்டணியில் விரிசல் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுகவை விமர்சனம் செய்ததைப் போல எவரும் செய்திருக்க முடியாது. ஆனால், அதிமுக இல்லாமல் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்ற காரணத்தால் பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை அகற்றி விட்டு அதிமுக கூட்டணிக்கு ஒத்துப் போகின்ற வகையில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். நேற்று அண்ணாமலை நிருபர்களிடம் பேசுகிற போது, மத்திய அமைச்சர் அமித் ஷா ‘தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று பலமுறை கூறிவிட்டார். அதற்கு பிறகு மாற்று கருத்து கூற எவருக்கும் உரிமையில்லை” எனக் கூறியது புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘நமது நோக்கம் 2026 சட்டமன்றத் தேர்தல் அல்ல, நமது இலக்கு 2029 மக்களவைத் தேர்தல் தான். தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் நமது எண்ணிக்கையை பெருக்குவது மட்டுமே நமது நோக்கம்” என்று கூட்டணி ஆட்சி குறித்து பேசுவதை தவிர்த்திருக்கிறார்.
தொடக்கத்திலிருந்தே கூட்டணி ஆட்சி என்பதில் அமித் ஷா, அண்ணாமலை போன்றோர் உறுதியாக இருந்தாலும், தமிழகத்தில் நயினார் நாகேந்திரன் கூட்டணி குறித்து பேச தயாராக இல்லை. இதன்மூலம் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும், இந்நாள் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் உட்கட்சி பனிப்போர் தொடங்கியிருக்கிறது.
அதிமுக, பாஜக கூட்டணி அறிவிப்பு வெளிவந்ததுமே அதிமுகவை பாஜக விழுங்கி விடும் என்று எச்சரித்தோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போட்டி சிவசேனா கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதேபோல, சரத் பவார் தலைமையிலான தேசிவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து போட்டி தேசியவாத காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரையும் வழிக்கு கொண்டு வர அமலாக்கத் துறை பயன்படுத்தப்பட்டு, பாஜக கூட்டணியில் சேர்க்கப்பட்டார்கள்.
பகீரத முயற்சிகள் மேற்கொண்டு ஒடிசாவில் ஆட்சியில் இருந்து நவீன் பட்நாயக் ஆட்சி அகற்றப்பட்டது. இதேபோல அச்சுறுத்தலுடன்தான் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பாஜக கூட்டணியில் சேர்க்கப்பட்டார். பாஜகவுக்கு பலம் இல்லாவிட்டாலும், இத்தகைய குறுக்கு வழிகளை கையாண்டு ஆட்சியை கைப்பற்றுவது கை வந்த கலையாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் அமித் ஷா இதே உத்தியை கையாண்டு அதிமுகவை நிர்ப்பந்தப்படுத்தி பாஜக கூட்டணியில் சேர வைத்திருக்கிறார். கூட்டணியில் சேர்ந்த பிறகு பலமுறை தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்று அமித் ஷா தொடர்ந்து பேசி வருகிறார். அதைத்தான் அண்ணாமலை வலியுறுத்திக் கூறுகிறார். காலப் போக்கில் அதிமுகவை அமித் ஷா கபளீகரம் செய்யப்போவது உறுதியாகும்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தயாராக இல்லை. அதேபோல, பாட்டாளி மக்கள் கட்சி தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக பிளவுபட்டு கிடப்பதால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
அதிமுக கூட்டணி என்பது தொடக்கத்தில் இருந்தே பொருந்தாத, யாரும் சேர முன்வராத ஒரு தோல்வி கூட்டணியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், பாஜகவை கழற்றி விட்டு, தமிழக வெற்றி கழகத்துடன் சேரலாமா என்ற முயற்சியிலும் அதிமுக ஈடுபடுகிறது. இத்தகைய குழப்பங்களுக்கிடையே தனது சுற்றுப் பயணத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவதை மக்கள் எள்ளி நகையாடி வருகிறார்கள்.
எனவே, திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கூட்டணியில் கருத்து வேறுபாடுகளோ, மோதல்களோ இல்லாமல் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுக மக்கள் விரோத கூட்டணியை தோற்கடிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இதில் குழப்பம் விளைவிக்க எவர் முயற்சி செய்தாலும் அந்த முயற்சிகள் பகல் கனவாகத்தான் முடியும்.
எங்கள் கூட்டணி கொள்கைக் கூட்டணி. ஆனால், அதிமுக, பாஜக கூட்டணி நிர்ப்பந்தத்தால் அமைந்த சந்தர்ப்பவாத கூட்டணி. அந்தக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாமல் படுதோல்வியடையச் செய்வார்கள்” என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.