சென்னை: கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடலூர் மாவட்டம் மலையடிகுப்பம், கொடுக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை காலி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, ஆக்கிரமிப்பு எனக்கூறி காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேறுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
காலி செய்வதை எதிர்த்து விவசாயிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் திருமூர்த்தி முறையீடு செய்தார். நீதிபதிகள் சுந்தர் மற்றும் ஹேம சந்திர கவுடா அமர்வு, இதனை அவசர வழக்காக மதியம் விசாரிப்பதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி அரசின் பொது திட்டத்திற்காக இந்த நிலங்களை கையகப்படுத்தப்படுவதாகவும், இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் வசதி உள்ள விவசாயிகள் தான் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, இது தொடர்பாக விவசாயிகள் சார்பில் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளரிடம் மறு ஆய்வு கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தடை விதிக்குமாறு கேட்டுள்ளோம் என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் முடிவெடுக்கும் வரை விவசாயிகளை அந்த பகுதியில் இருந்து வெளியேற்றக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் விவசாயிகளுக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டால், அதற்கு மேல்முறையீடு செய்வதில் பத்து நாட்கள் கால அவகாசம் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.