நாமக்கல்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் நல்ல திட்டம். இதில் பணம் வீணடிப்பு இல்லை. கடந்த காலத்தில் நடந்த திட்டத்தை பெயரை மாற்றி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் இடையே கந்துவட்டி கொடுமையால் சிரமப்படும் நபர்களை குறி வைத்து புரோக்கர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான நபர்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் நல்ல திட்டம். இதில் பணம் வீணடிப்பு இல்லை. கடந்த காலத்தில் நடந்த திட்டத்தை பெயரை மாற்றி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொடிக்கம்பங்களை பிடுங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம் என்றார்.
இதில் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு, மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.