மதுரை: “கருத்து சுதந்திரம் என்ற பெயரில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி வருகிறார்கள்” என சட்டப்பேரவை எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
மதுரையில் இதுகுறித்து அவர் கூறியது: “ஸ்டாலினின் திமுக அரசு 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மீண்டும் ஒரு பொய் அஜெண்டாவோடு தயாராகி வருகிறது. 4 ஆண்டுகளாக எதையும் நிறைவேற்றாமல் தற்போது மனுக்களை வாங்கி வருகிறார்கள். திமுக அரசு மீது மக்கள் கொதித்துப்போய் உள்ளார்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மறைந்த தலைவர்களையும், பொது மக்களையும் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.
விடியல் பயணம் என்று அறிவிப்பர். ஆனால், பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் மக்களை ஓசி பயணம் என்று விமர்சிப்பர். மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் என்பர். ஆனால், அதைப் பெற மக்கள் முன் வந்தால் அதிலே நீங்கள் குடும்பம் நடத்தலாம், கல்லூரி மாணவிகள் ஆண் நண்பர்களோடு செல்போனில் பேசலாம் என்று கொச்சைப்படுத்துவர்.
கடுமையாக படித்து உழைத்து தமிழர் யாராவது ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாகவோ, ஐபிஎஸ் அதிகாரியாகவோ, நீதிபதியாகவோ சாதனை படைத்தால் அது நாங்கள் போட்ட பிச்சை என்று திமுக மூத்த நிர்வாகிகள் கருத்து சொல்வார்கள். ஆ.ராசா போன்றவர்கள் எல்லாம் மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
இந்த வரிசையில் தற்போது திருச்சி சிவா, முன்னாள் முதல்வர் காமராஜரை பற்றி கருத்து என்ற பெயரில் கூறிய விமர்சனத்தால் நாடே கொந்தளித்து போயிருக்கிறது. இப்படி மறைந்த தலைவர்களை அவர்கள் கொச்சைப்படுத்தி பேசுவது ஒன்றும் புதிதல்ல” என்று அவர் கூறினார்.