சென்னை: தவெகவில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகள் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களை கவுரவிக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தொண்டர்கள் உற்சாகமடைந்து உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. உறுப்பினர் சேர்க்கைக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி ‘கியூஆர் கோடு’இணைப்பை விஜய் அறிமுகம் செய்து, தவெகவில் முதல் உறுப்பினராக இணைந்தார். அதனை தொடர்ந்து, கியூ ஆர் இணைப்பை பயன்படுத்தி, வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் இணையதளம் மூலமாக தவெகவில் உறுப்பினர்களாக இணைய, நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் அழைப்பு விடுத்தார்.
‘கியூ ஆர் கோடு’இணைப்பை அறிமுகம் செய்த சில நிமிடங்களிலேயே, லட்சக்கணக்கானோர் அதை பயன்படுத்தி உறுப்பினர்களாக சேர முயன்றதால், இணையதளம் முடங்கியது. இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் மூலம் பொதுமக்களின் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த விஜய் உத்தரவிட்டார். உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. அந்தவகையில், தற்போதுவரை தமிழக வெற்றிக் கழகத்தில் 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி பனையூரில் நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் விரைவில் 2 கோடி உறுப்பினர்கள் இலக்கை எட்ட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தினார். மேலும், உறுப்பினர் சேர்க்கைகாக புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில், உறுப்பினர் சேர்க்கை செயலி வடிவமைக்கும் பணிகள் முடிவடைந்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) பனையூரில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, செயலியை பயன்படுத்துவதற்கான பயிற்சியும் கூட்டத்தில் அளிக்கப்பட்டு, செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகியை அவரது வீட்டுக்கு நேரில் சென்று விஜய் சந்தித்து கவுரவிப்பார் என்று தவெக வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. இதனால், தொண்டர்கள் இப்போதே உற்சாகமடைந்து, உறுப்பினர் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், இந்த கூட்டத்தில் மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும் மாநாடு, சுற்றுப்பயணம் குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்தும் சில அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.