திண்டுக்கல்: அடுத்த முறை ஆட்சிக்கு வருவோம் என எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லிவருகிறார், என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட மறவபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. முகாமை துவக்கிவைத்து பொது மக்களிடம் மனுக்களை அமைச்சர் ஐ.பெரியசாமி பெற்றார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெறப்படும் மனுக்கள் மீது தகுதியுள்ள மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் காமராஜர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் போது திமுக போட்டி போடவில்லை. பச்சைத் தமிழர் வெற்றி பெற வேண்டும் முதல்வராக இருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொண்ட இயக்கம் திமுக. அதே வழியில் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இருந்தார். காமராஜர் உழைப்பு, தியாகத்தை மதிக்கக்கூடிய ஒரே ஒரு இயக்கம் திமுக தான், ஒரே ஒரு தலைவர் ஸ்டாலின் மட்டுமே.
அடுத்த முறை ஆட்சிக்கு வருவோம் என எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லிவருகிறார். எவ்வளவு நாள் பொய் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. 10 முறை பொய் கூறினால் உண்மையாகும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அது நடக்காது. நான்கு ஆண்டுகளில் கிடைக்காத சலுகைகளை மக்களுக்கு வீடு தேடிச்சென்று கிடைக்கச் செய்யும் பணியை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக தான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்படுகிறது. அத்தனை துறையும் ஒரே இடத்தில் கொண்டு வரப்பட்டு மனுபெறப்பட்டு மக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படுகிறது. புறம்போக்கில் குடி இருக்கிறேன் பட்டா வேண்டும் என்றால் உடனே கொடுத்து வருகிறோம். வீடுகள் கட்டி கொடுத்து வருகிறோம். காமராஜர் நாளை கல்வி நாளாக அறிவித்து விடுமுறை விட்டு வருகிறோம். அவரது புகழை போற்றிக் கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் திமுக தான்.
பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஏற்கெனவே சட்டமன்றத்தில் கூறியுள்ளார். அவர்களது ஓய்வூதியம் அதற்கான கமிட்டி அமைத்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது விரைவில் நல்ல முடிவு வரும், என்றார்.