மாஸ்கோ: ரஷ்யா – உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் எனும் ஜெலன்ஸ்கியின் கருத்தில் உடன்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா, ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற சமாதான முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனினும், அமைதிக்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், போரில் ஈடுபட்டு வரும் நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அதிக முனைப்பு காட்ட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி இருந்தார். முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்ற ஜெலன்ஸ்கியின் கருத்தில் உடன்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இரண்டு முறை துருக்கியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில், இரு நாடுகளும் போர் கைதிகளைக் பரிமாறிக்கொள்வது என்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை பரிமாறிக்கொள்வது என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.
எனினும், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு இன்னும் நாள் குறிக்கப்படவில்லை. மேலும், போர் நிறுத்தத்துக்கான விதிமுறைகளை ஏற்பதில் இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த வேண்டும் என்ற ஜெலன்ஸ்கியின் வேண்டுகோளுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் ரஷ்யா மீது 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 16ம் தேதி கெடு விதித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த ட்ரம்ப், “புதின் மீது நான் மிகவும் அதிருப்தியில் இருக்கிறேன். அவர் மிகவும் அழகாகப் பேசுவார். ஆனால் இரவில் மக்கள் மீது குண்டுகளை வீசுகிறார். அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் ரஷ்யா மீது 100% வரி விதிக்கப்படும். மேலும், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கும் திட்டமும் உள்ளது” என்று தெரிவித்திருந்தார். இந்த பின்னணியில், ரஷ்யாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.