புதுச்சேரி: பொதுக்கூட்ட பேச்சுகள் தொடர்பான அவதூறு வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு விலக்கு அளித்து நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
புதுவை வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே 2014-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவதூறாகப் பேசியதாக உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மீதான விசாரணை புதுவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த விசாரணையின் போது விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக 2-வது குற்றவியல் நடுவர் நீதிபதி ரமேஷ் பிடிவாரன்ட் கடந்த ஆண்டு பிறப்பித்ததால், கடந்த ஆகஸ்ட் 30-ல் விசிக தலைவர் திருமாவளவன் புதுவை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்நிலையில், கட்சித் தலைவர், எம்பி ஆகியோர் அவதூறு வழக்குக்காக நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராவதில் இருந்து விலக்கு தரக் கோரி புதுச்சேரி ஜேஎம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதி சேரலாதன், இவ்வழக்குக்காக விசிக தலைவர் திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து இன்று உத்தரவு பிறப்பித்தார்.