மருத்துவ உலகின் ஒரு புதிய மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு, பிரிட்டனில் 3 பேரின் டிஎன்ஏ மூலம் குழந்தை பிரசவிக்கும் முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த முறையில் அங்கு 8 குழந்தைகள் பிறந்துள்ளன. பரம்பரை நோய்கள் அடுத்த வாரிசுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கவே மகப்பேறு சிகிச்சையில் இந்தப் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலம் பிறக்கும் குழந்தைகள், தனது தாய், தந்தை மற்றும் கருமுட்டை தானமாக அளிக்கும் பெண் ஆகிய 3 பேரின் டிஎன்ஏ-க்களைப் பெற்றிருக்கும். இவ்வாறாக பெறப்படும் கருமுட்டை தானம் ‘மைட்டோகாண்ட்ரியா தானம்’ (mitochondrial donation) என்று சொல்லப்படுகிறது. அதாவது, ஓர் உயிரணுவில் (செல்லில்) உள்ள அந்த குறிப்பிட்ட பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இங்கிலாந்தின் நியூகேஸ்டில் மருத்துவமனை மருத்துவர்கள், விஞ்ஞானிகள் நீண்ட கால சோதனைக்குக் கிடைத்த வெற்றியாக இது கொண்டாடப்படுகிறது. இந்த முறையில் குழந்தைகள் பிறந்தால், அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பரம்பரை நோய்கள் கடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று விஞ்ஞானிகள் உறுதியளிக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு மரபணுக் குறைபாடுகள் பிறக்கும் சிறப்புக் குழந்தைகள் அதன் பெற்றோருக்கு, ஏன் அவர்களுக்குமே சவாலாக இருக்கும் சூழலில், பிறப்பதற்கே முன்பே மரபணு குறைபாட்டை சீர்செய்ய முடியும் என்றால், அது மகப்பேறு சிகிச்சையில் மிகப் பெரிய புரட்சியே.
ஆனால், பரம்பரை நோய்களைத் தடுப்பதற்காக என்று இவ்வாறாக 3 பேரின் டிஎன்ஏக்கள் மூலம் குழந்தைகள் பிரசவிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியதா, ஏமாற்றத்துக்குரியதா அல்லது கவலைக்குரியதா என்ற வாத-விவாதங்கள் எழுந்துள்ளன.
எப்படி நிகழ்த்தப்படுகிறது? – ‘தி நியூ இங்கிலாந்து’ மருத்துவ இதழில் இந்த மிக முக்கியமான கருத்தரிப்பு சிகிச்சை தொடர்பாக இரண்டு முக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. அதில், மைட்டோகாண்ட்ரியா தானம் மூலம் 22 பெண்கள், அதுவும் மரபணு குறைபாடுகளை குழந்தைக்குக் கடத்தக்கூடிய வாய்ப்புள்ள பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த சிகிச்சை மூலம் லே சிண்ட்ரோம் (Leigh Syndrome) போன்ற நோய்கள் கருவுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதும் அந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இந்த செயல்முறைக்கு மூன்று பேரின் டிஎன்ஏக்கள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒன்று தாயினுடையது, மற்றொன்று தந்தையுடையது. இந்த இரண்டிலிருந்து நியூக்ளியர் டிஎன்ஏக்களும், வேறொரு பெண்ணிடமிருந்து தானமாகப் பெறப்படும் டிஎன்ஏ-வில் இருந்து ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியாவும் எடுக்கப்படுகிறது. உயிரணுக்களின் ஆற்றல் நிலையம் என்றழைக்கப்படும் மைட்டோகாண்ட்ரியா மட்டும் ஆரோக்கியமான கருமுட்டையிலிருந்து பெறப்படுவதால், அது குழந்தைக்கு தாயிடமிருந்து வரக்கூடிய மைட்டோகாண்ட்ரியல் பரம்பரை / மரபுவழி நோய்களைத் தடுக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மைட்டோகாண்ட்ரியா தானம் சட்ட வரைமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது அதன் சாத்தியக்கூறு, வெற்றி வாய்ப்பு மற்றும் பக்க விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
10 ஆண்டுகளுக்குப் பின்? – அந்த விவாதங்கள் நடந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 8 குழந்தைகள் பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது மருத்துவத் துறையின் வெற்றி என்றாலும் கூட, இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சி, சோதனை பற்றி ஏன் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதுவும், இதில் மக்களின் வரிப்பணம் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்யப்படிருந்த நிலையில், ஏன் தகவல் வெளியிடப்படவில்லை? – இதுபோன்ற முத்தாய்ப்பான ஆராய்ச்சிகளில் வெளிப்படைத்தன்மை முக்கியம்தானே என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, இந்தத் திட்டத்தை முன்மொழிந்த போது ஆராய்ச்சியாளர்கள் / மருத்துவர்கள் ஆண்டுக்கு 150 குழந்தைகளை பிரசவிக்க முடியும் என்றார்கள். ஆனால், இப்போது வெறும் 8 குழந்தைகள் தான், அதுவும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தொழில்நுட்பம் மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருத்தரிப்பு விவகாரங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் கொண்ட பிரிட்டனின், ‘மனித கருத்தரித்தல் மற்றும் கருவியல் ஆணையம்’ (The Human Fertilisation and Embryology Authority) கடந்த 2017-ம் ஆண்டு இந்த முறை மூலம் கருத்தரிக்க 32 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. ஆனால், 22 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு 8 குழந்தைகள் இந்த சிகிச்சையில் பிறந்துள்ளன. அப்படியென்றால், இந்தத் தொழில்நுட்பத்தால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற வாதம் எண்ணிக்கை அடிப்படையில் தோற்றுவிட்டதா என்று கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
மூன்றாவது, பாதுகாப்பு ஏற்பாடு சார்ந்தது. 8 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு தாய்வழியாக பெறப்படும் மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ அதிகமாக இருப்பதால் அதன்மூலமாக வரக்கூடிய மரபுவழி நோய்களைத் தடுக்க முடியும் என்பது 100 சதவீதம் சாத்தியமில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால், இந்த புதிய முறை மூலம், இத்தகைய மரபுவழி நோய்களை முற்றிலுமாக தடுக்க முடியாது; அது ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்கலாம் என்று கருத்துகளும் பதிவாகி வருகின்றன.
மூன்று பேரின் மரபணுவைப் பெற்று குழந்தையை பரம்பரை நோய்கள் இல்லாமல் காக்கும் வகையில், கருவை உருவாக்குவதை முழுமையாகக் கொண்டாடிவிட இயலாத அளவுக்கு அதனைச் சுற்றிய சந்தேகங்கள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும், இப்போதைக்கு 8 குழந்தைகளும் பரம்பர நோய் ஏதுமின்றி ஆரோக்கியமாக பிறந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியதே.
இத்தகைய சாதனை மைல்கல்கள் ஏற்படும்போது பொறுப்பேற்றலும் அவசியமாகிறது. குழந்தைப்பேறு மருத்துவத்தில் தன்னை தலைமையிடத்தில் வைத்துப் பார்க்க விரும்பும் பிரிட்டன், இதில் இன்னும் பொறுப்புடன் செயல்பட்டு நிறைய தம்பதிகள் பலனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் முன்வைத்துள்ளனர்.