புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ (TRF) பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரிக்காவின் முடிவை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றுள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-அமெரிக்கா இடையிலான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பின் வலுவான நடவடிக்கையான லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு மற்றும் உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க அரசை பாராட்டுகிறேன். பயங்கரவாதத்திற்கு எந்த சகிப்புத்தன்மையும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு டிஆர்எஃப் பொறுப்பேற்றது. அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என இந்திய அரசு உலக நாடுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிக்கையில், “ஐ.நா.வால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பாக தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் அமைப்பு இருக்கிறது. எனவே அமெரிக்க வெளியுறவுத்துறை, தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும், உலகளாவிய பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலும் சேர்க்கிறது. தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்கும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி வழங்கவும் ட்ரம்ப் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது.
லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டிஆர்எஃப் கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது, இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது