லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இறங்கிய இந்திய அணி 4-ம் நாள் மாலையில் ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஜோப்ரா ஆர்ச்சரிடம் இழந்தது. அந்த ஷாட் தேர்வு படுமோசம் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
ஏனெனில் ஜோஃப்ரா ஆர்ச்சரே அந்தப் பந்தை முழு உத்வேகத்துடன் வீசவில்லை. அதை லூஸ்னர் என்றே வர்ணனையில் தெரிவித்தனர். அதை புல் ஷாட் ஆடப்போய் பெரிய கொடியாக ஏற்றி சேசிங்கையே பாழாக்கினார் ஜெய்ஸ்வால். இதனையடுத்து இங்கிலாந்து உத்வேகம் பெற்று அன்றே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது. மறுநாள் ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, பும்ரா, சிராஜ் சவால் கொடுக்க கிட்டத்தட்ட வெற்றி பெறுவதற்கு அருகில் வந்து பென் ஸ்டோக்ஸ் வயிற்றில் புளியைக் கரைத்து கடைசியில் ஒருவழியாக இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இப்போது 4-வது டெஸ்ட் போட்டிக்குத் இந்திய அணி தயாராகி வருகிறது. பும்ரா இந்தப்போட்டியில் ஆடியே ஆக வேண்டும். ஏனெனில் இது தொடரின் வாழ்வா சாவா போட்டி. இதை விட்டால் தொடரை இழந்து விடுவோம். ஆகவே பேட்டர்கள் தாங்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஜெய்ஸ்வால், இங்கு வங்கதேசத்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே வங்கதேசத்தின் 150 கி.மீ வேகம் வீசும் நஹீத் ரானாவிடம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிவேகப் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அதே போல் இப்போது லார்ட்ஸில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிவேக பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் ஆட்டமிழந்துள்ளார். இந்தப் போக்கை ஜெய்ஸ்வால் தவிர்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது. அன்று மட்டும் அந்த 2-வது இன்னிங்ஸில் அவர் 30-40 ரன்களை அடித்திருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். ஜெய்ஸ்வாலின் அவுட் தான் ஆட்டத்தையே இங்கிலாந்து பக்கம் மாற்றி விட்டது.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் ஷாட் குறித்து பேசிய ஸ்டூவர்ட் பிராட், “ஜெய்ஸ்வால் அவுட் ஆன ஷாட் படுமோசமான ஷாட் ஆகும். அந்தப் பந்தை அவர் ஆஃப் சைடில் கட் ஷாட் ஆடியிருந்தால் பவுண்டரிக்குப் பறந்திருக்கும். அவர் தவறாக புல் ஷாட்டைத் தேர்வு செய்தார். அவர் அப்படி அவுட் ஆனவுடன் இங்கிலாந்துக்கான வாய்ப்பைத் திறந்து விட்டுச் சென்றார்.
ஜெய்ஸ்வால் கிரீசில் இருந்தால் ரன்கள் வந்து கொண்டேயிருக்கும். ஒரு குறைந்த ஸ்கோர் இலக்கை எந்த அணியும் தடுக்கும் போதும் சேவாக், வார்னர் போன்ற வீரர்கள் விரைவில் ஆட்டத்தை நம்மிடமிருந்து பறித்துச் சென்று விடுவார்கள். 60 ரன்களை விக்கெட் விழாமல் இவர்கள் போன்ற வீரர்கள் எடுத்தார்கள் என்றால் அதன் பிறகு வெற்றி சுலபமாகி விடும். ஜெய்ஸ்வால் விக்கெட் அத்தகைய விக்கெட்.
அவர் ஆட்டமிழந்தவுடன் கருண் நாயர் வந்தார். அவர் பந்தை அதற்குரிய மரியாதையைக் கொடுத்து ஆடுபவர். இதனையடுத்து அவரைக் கட்டுப்படுத்த பென் ஸ்டோக்ஸ் அட்டாக்கிங் களவியூகத்தை மேற்கொண்டார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் போயின. ஆகவே ஜெய்ஸ்வால் வீழ்ந்த அந்தத் தருணம் ஆட்டம் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது.” இவ்வாறு கூறினார் ஸ்டூவர்ட் பிராட்.