பெங்களூரு: பெங்ளூருவில் உள்ள 15 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள 15 தனியார் பள்ளிகளுக்கு “roadkill333@atomicmail.io.” என்ற ஒற்றை மின்னஞ்சல் மூலம் இன்று காலை 7.31 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து சில பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. சில பள்ளிகள் மாணவர்களை வெளிப்பகுதியில் காத்திருக்கும்படி அறிவுறுத்தின.
பள்ளி நிர்வாகங்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில், காவல்துறை, நாசவேலை தடுப்புக் குழுக்கள், மோப்ப நாய் படைகள் ஆகியவை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. சில பள்ளிகளில் தேடுதல் வேட்டை நிறைவடைந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என போலீஸார் உறுதிப்படுத்தினர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு மேற்கு இணை ஆணையர் வம்சி கிருஷ்ணா, 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தொடர்ந்து புகார்கள் வருவதால், சரியான எண்ணிக்கையை தற்போது உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்தார்.
அந்த மிரட்டல் மின்னஞ்சலில், “வணக்கம். பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருட்கள் வைத்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் எழுதுகிறேன். வெடிப்பொருட்கள் கருப்பு பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் அனைவரும் துன்பப்படுவதற்குத் தகுதியானவர்கள். உங்கள் அனைவரையும் இந்த உலகத்திலிருந்து அழித்துவிடுவேன். ஒரு ஆன்மா கூட உயிர் பிழைக்காது. செய்திகளைப் பார்த்து நான் மகிழ்ச்சியுடன் சிரிப்பேன்.
நான் உண்மையிலேயே என் வாழ்க்கையை வெறுக்கிறேன். எனக்கு ஒருபோதும் உண்மையிலேயே உதவி கிடைக்கவில்லை, மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், யாரும் இதுவரை என்மீது அக்கறை கொள்ளவில்லை, யாரும் எனக்காக கவலைப்பட மாட்டார்கள். உதவியற்ற, ஏதும் அறியாத மக்களுக்கு மருந்துகளைக் கொடுப்பதில் மட்டுமே அவர்கள் அக்கறை கொள்வார்கள். அந்த மருந்துகள் உடல் உறுப்புகளை அழிக்கும், உடல் எடையை அதிகரிக்கும் என்ற உண்மையை அவர்கள் ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.
மனநல மருந்துகள் உதவும் என்று மக்கள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். ஆனால் அவை உதவுவதில்லை, இதற்கு நானே ஒரு வாழும் உதாரணம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனைத்து மிரட்டல்களும் ஒரே மின்னஞ்சலில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதால், அனைத்தையும் தொகுத்து ஒரே வழக்காக பதிவு செய்வதா அல்லது தனித்தனி வழக்குகளாக பதிவு செய்வதா என்பதை போலீசார் இன்னும் முடிவு செய்யவில்லை.
டெல்லியில் இன்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர்கள், மாணவர்கள் அச்சம்