சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 650 பூங்காக்களை ரூ.75 கோடியில், 3 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணி தனியாரிடம் வழங்கப்படடுள்ளது. சென்னை மாநகராட்சியில் 2021-ம் ஆண்டுக்கு முன்பு 704 பூங்காக்களும், 610 விளையாட்டு அரங்குகளும் இருந்தன. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.81 கோடியில் 204 பூங்காக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. ரூ.24 கோடியில் 37 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் தற்போது 908 பூங்காக்களும், 724 விளையாட்டு அரங்குகளும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரூ.8 கோடியில், 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2025- 26 நிதியாண்டில் ரூ.60 கோடியில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. 200-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் ரூ.30 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன.
மாநகராட்சி பூங்காக்கள் இதற்கு முன்பு தனியார் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. 6 மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு ஒப்பந்தம் முடிந்த நிலையில், மீண்டும் டெண்டர் கோரப்பட்டு, தற்போது ரூ.75 கோடி செலவில், 650 பெரிய பூங்காக்களை பராமரிக்கும் பணி மீண்டும் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஜூலை 16-ம் தேதி முதல் 650 பூங்காக்களில் தனியார் மூலம் பராமரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த நிறுவனங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பூங்காக்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்ளும். இந்த இடைப்பட்ட 6 மாத காலத்தில் என்யுஎல்எம் பணியாளர்களை கொண்டு தற்காலிகமாக பராமரிக்கப்பட்டு வந்தது.
தற்போது வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, தனியார் நிறுவன பராமரிப்புப் பணிகளில் சுத்தம் செய்தல், சீரமைப்பு செய்தல், தோட்டக்கலை செய்தல், கழிப்பறை பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பழுதுபார்ப்பு போன்ற பணிகள் அடங்கும்.
மேலும், திருவொற்றியூர், மாதவரம், தண்டையார் பேட்டை மற்றும் ராயபுரம் மண்டலங்களில் 42
பூங்காக்களை பராமரிக்கும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.