அரக்கோணம்: காஞ்சிபுரம் – அரக்கோணம் நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதியதில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தர்மராய ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (48). இவர் வீட்டிலேயே கார் பழுது பார்க்கும் பணிமனை நடத்தி வந்தார். இவரது மனைவி லதா (45). இளைய மகன் தினேஷ்(20).
இந்நிலையில், வெங்கடேசன் நேற்று காலை தனது மனைவி லதா, மகன் தினேஷ் ஆகியோருடன் காரில் கோவிந்தவாடி அகரம் பகுதியில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலுக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் முடிந்து மீண்டும் அரக்கோணம் திரும்பினர்.
டயர் வெடித்ததால்… காரை தினேஷ் ஓட்டி வந்தார். காஞ்சிபுரம் – அரக்கோணம் நெடுஞ்சாலையில் பருவமேடு அருகே வந்தபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடி, எதிரே அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் லதா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உயிருக்குப் போராடிய வெங்கடேசனை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வெங்கடேசன் உயிர் இழந்தார்.
இதேபோல, அவரது மகன் தினேஷ் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக நெமிலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.